இலங்கை மற்றும் ஏனைய தொடர்புடைய நாடுகளை ஓரணிக்குக் கொண்டுவர பாத் பைன்டர் அமைப்பு மும்முரம்
பாத் பைன்டர் பவுண்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான மிலிந்த மொறகொட இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
பாத் பைன்டர் பவுன்டேஷன் இந்தியாவுடன் பேணி வரும் நெருக்கமான தொடர்புகளின் ஓரங்கமாக அமைந்திருக்கும் இவ்விரு நாள் விஜயத்தின்போது, மிலிந்த மொறகொட இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனைக் குழுக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடனான சந்திப்புக்களும் இதில் அடங்குகின்றன.
மிலிந்த மொறகொடவினால் நிறுவப்பட்ட பாத் பைன்டர் பவுன்டேஷன் அமைப்பானது இந்திய அரசாங்கத்துடனும், ஏனைய சிந்தனைக் குழுக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தனியார் துறையினருடனும் நெருங்கிய பிணைப்பைப் பேணிவருவதுடன் தொடர் கலந்துரையாடல்களையும் நடத்தி வருகின்றது.
அதன்படி இவ்வமைப்பினால் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய - இலங்கை முன்முயற்சிகள் நிலையமானது இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
அதன்படி தற்போது இலங்கையின் அபிவிருத்திக்கு அவசியமான கூட்டிணைந்த ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இலங்கை மற்றும் ஏனைய தொடர்புடைய நாடுகளை ஓரணிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பாத் பைன் டர் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.