யார் நீதிமான்கள் நீதி இளவரசர்கள் சர்வதேசமா வாருங்கள் அவர்களையும் பார்ப்போம்.-- தரன்ஸ்ரீ

1 month ago



யார் நீதிமான்கள் நீதி இளவரசர்கள் சர்வதேசமா வாருங்கள் அவர்களையும் பார்ப்போம்.-- தரன்ஸ்ரீ

வியட்நாம் நாட்டின் மீது வல்லரசுகள் என்று கூறும் சர்வதேசங்கள் அமெரிக்கா தலைமையில் அன்று எழுதிய தீர்ப்புகளும் நீதிகளும்…இன்று வல்லரசாக முதன்மை நிலையில் இருக்கும் அமெரிக்காவுக்கு போராட்டத்தின் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து ஒரு சிறிய நாடு வியட்நாம்.

அது வியட்நாமின் போராட்ட வெற்றிப்பாதை காலங்கள்…

காலங்கள் கடந்தும் மறக்க முடியாத வலிகளை அமெரிக்கா இன்று சுமந்து கொண்டிருந்தாலும் தங்களை வெற்றியாளர்களாக தான் அடையாளப்படுத்துகிறார்கள் சர்வதேச மட்டத்தில் கடந்து போகும் வரலாறு.

ஏஜென்ட் ஆரஞ்ச் என்பது மிகக் கொடிய நச்சுத்தன்மை உள்ள தாவரக் கொல்லி வேதிப் பொருள்.

வியட்நாம் மீது அமெரிக்கா படையெடுத்து ஆக்கிரமித்தபோது அதை எதிர்த்துப் போராடிய வியத்காங் என்ற உள்நாட்டுப் படையினர் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டனர்.

வியத்காங் படையினர் காடுகளில் ஒழிந்திருந்தனர். அமெரிக்காவின் வலிமையான இராணுவத்துக்குப் பெரும் சவாலாக இருந்தது.

விமானத் தாக்குதல் நடத்துவதென்றால் வியத்காங்குகள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவேண்டும்.

ஆனால் வியட்நாமின் அடர்ந்த காடுகள் விமானத்தில் இருந்து கண்காணித்து அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தைப் பார்க்கத் தடையாக இருந்தது.

அதற்காக ஏஜென்ட் ஆரஞ்ச் என்ற தாவரக் கொல்லியை அந்தக் காடுகள் மீது விமானம் மூலம் தூவியது அமெரிக்கா.

இதனால் அடர்ந்து சடைத்த தாவரங்கள் மரங்கள் கருகி வியத்காங்குகள் பதுங்கியிருந்த இடங்கள் தெரியத் தொடங்கின.

1962 முதல் 1971 வரை போரில் பயன்படுத்தப்பட்ட இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியில் டயாக்சின் என்ற கொடிய நச்சுப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மிக அதிகமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த ஏஜெண்ட் ஆரஞ்ச் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் புற்றுநோயும் குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதும் அதிகரித்ததற்கு இந்த டயாக்சின்தான் காரணம் என்று கூறப்பட்டது.

பத்து லட்சக் கணக்கான மக்கள் இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும் 1. 5 லட்சம் குழந்தைகள் மோசமான பிறவிக் குறைபாடுகளோடு பிறந்ததாகவும் வியட்நாம் கூறுகிறது.

வியட்நாம் போரில் அமெரிக்கப் படையினர் மொத்தம் 8 கோடி லிட்டர் ஏஜென்ட் ஆரஞ்ச் வேதிப் பொருளை தூவியிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்த வேதிப் பொருளை நுகர நேர்ந்ததால் 1960களில் இருந்து வியட்நாமில் பிறவிக் குறைபாடு புற்றுநோய் போன்றவை பெரிய அளவில் அதிகரித்ததை அந்நாட்டு மருத்துவர்கள் கவனித்தனர்.

இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் பயன்பாட்டை அமெரிக்கா 1971ம் ஆண்டு நிறுத்தியது 1975ம் ஆண்டு வியட்நாமில் இருந்தே பின்வாங்கியது.

இது முடிந்து கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்குப் பிறகும் பல்லாயிரம் குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் பிறவிக் குறைபாடுகளோடு பிறப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இது வியட்நாமியர்களை மட்டுமல்ல அங்கிருந்த அமெரிக்க இராணுவத்தினரையும் அவர்களது சந்ததிகளையும்கூட கடுமையாகப் பாதித்தது.

இந்த இரசாயன தாக்குதலில் முழுமையாக பாதிக்கப்பட்ட வியட்நாம் பெண்மணி ஒருவர் இன்று காலங்கள் கடந்தும் பிரான்ஸ் நாட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

வியட்நாம் போர் முழுவதையும் ஒரு பத்திரிகையாளராகப் பார்வையிட்டு எழுதிய டிரான் டோங்கா என்ற 78 வயது வியட்நாமிய - பிரெஞ்சு பெண் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியை போரில் பயன்படுத்தியது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தீங்கு விளைவித்ததாக அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஏஜென்ட் ஆரஞ்ச் பயன்படுத்தியதற்கு எதிராக பாதிக்கப்பட்ட குடிமக்களில் ஒருவரது வழக்கை நீதிமன்றம் விசாரணை செய்வது இதுவே முதல் முறை.

நான் எனக்காக மட்டும் போராடவில்லை என் குழந்தைகளுக்காகவும் பாதிக்கப்பட்ட பல பத்துலட்சம் பேருக்காகவும் நான் போராடுகிறேன் என்று வழக்கு விசாரணைக்கு முன்பாக கூறினார் ட்ரான் டோங்கா.

புற்றுநோய் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல உடல் நலப் பிரச்சினைகளால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதயம் கோளாறான முறையில் அமைந்திருந்த காரணத்தால் இவரது சகோதரி ஒருவர் இறந்துவிட்டார்.

இந்த வேதிப் பொருளின் பயன்பாட்டால் தமது உடல் நலம் பாதிக்கப்பட்டதற்காகவும் தனது குழந்தைகள் உள்ளிட்ட மற்றவர்களின் உடல் நலப் பாதிப்புகளுக்காகவும் இழப்பீடு கேட்டுள்ளார் ட்ரான் டோ ங்கா.

இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலால் தாவரங்கள் அழிந்தன, விலங்குகள் உடலில் நஞ்சு ஏறியது வியட்நாமின் மண்ணும் ஆறுகளும் மாசுபட்டன.

எனவே இந்த தாவரக் கொல்லியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்றும் தனது வழக்கில் கோரியுள்ளார் அவர்.

50 ஆண்டுகளுக்கு முன் தாங்கள் நடத்திய தவறுக்கு இன்றுவரை தீர்ப்பை எழுத முடியாதவர்கள் தங்களின் கடந்த கால தவறுகளை மறைத்து மறந்து பிற நாடுகள் மீது ஆதிக்கத்தை செலுத்தி தீர்ப்புகளை வழங்க தீர்ப்பை எழுத ஆசைப்படுகிறார்கள்.

வல்லரசுகள் என்றுமே தங்களது தோல்விகளை ஏற்றுக் கொள்வதற்கு முன்வருவதில்லை.

எனக்கு சிறுவயதில் இருந்து ஆங்கிலப் படங்கள் பார்ப்பது மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் போராட்டங்கள் சம்பந்தப்பட்ட படங்களை அதிகம் பார்த்துள்ளேன்.

அமெரிக்கா வியட்நாம் போராட்டங்கள் சம்பந்தமாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன் முடிந்த வரை.

ஆனால் எந்தப் திரைப்படத்திலும் முடிவில் தமது தோல்வியை சித்தரிப்பதை ஏற்றுக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை.

சாதாரணமாக ஒரு வரலாற்று திரைப்படத்தில் கூட தமது தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இல்லாத சர்வதேசத்திடம் நாங்கள் அதிகம் எதிர்பார்க்கிறோம்.

எனது மனதில் தோன்றும் கேள்விகள் சில.

இன்று சர்வதேசத்தின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன இலங்கை விடயத்தில் வரவேற்க வேண்டிய விடயம் தான்.

ஆனால் இவர்கள் கைகளில் 2009 முன் இதே அதிகாரங்கள் இருந்தன.

சிறிய நாடுகளை அடக்கி ஆளும் தன்மை கொண்ட மனப்பான்மை பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி சாதகத் தன்மையை உருவாக்கும் தன்மை இப்படிக் கூறிக் கொண்டே போகலாம்.

அன்று (2009)அன்றாடம் உயிர்கள் பறிபோய் கொண்டிருக்கும்பொழுது வேடிக்கை பார்த்தவர்கள் தானே இவர்கள் அனைவரும்.

தடுப்பதற்கு யாரும் வரவில்லை நாங்கள் அழிந்து கொண்டிருக்கும் பொழுது அதிகமானவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன், யுத்தம் முடிந்ததும் உடனடியாக ஐக்கிய நாடுகளின் தலைவர் எமது இலங்கைக்கு சிறப்பான தேனீர் விருந்துபசாரத்துக்கு வருகை தந்தார்.

ஏன் அவரால் மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒரு மாதத்துக்கு முன் ஒரு விஜயத்தை மேற்கொள்ள முடியவில்லை.

உயிர்கள் பறிபோய் கொண்டிருக்கும் பொழுது, ஆம் சர்வதேசம் வேடிக்கை பார்த்தது எங்களுடைய அழிவுக்காக காத்திருந்தது.

தனக்கு தொகுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணி உடனடியாக இலங்கை வர முடிந்த அவரால்.

யுத்தத்தில் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபை அதன் தலைமை வல்லரசுகள் சர்வதேசங்கள் நினைத்திருந்தால் எங்களை காப்பாற்றி இருக்க முடியும்.

ஆம் நாங்கள் சிலரின் நிகழ்ச்சி நிரல்களுக்கும் தேவைகளுக்கும் பயன்படுகிறோம் பயன்படுத்தப்படுகிறோம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ளாத வரை இன்றைய வாழ்வு தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறது.

எங்களிடம் கையேந்த வேண்டியவர்களிடம் நாங்கள் கையேந்தி நிற்க வேண்டிய நிலைமை இன்று, ஆனால் உண்மையான வரலாறு 100 ஆண்டுகளுக்கு முன் அல்லது அதற்கு முன் ஆபிரிக்கா தொடங்கி ஆசிய நாடுகள் வரை பொருளாதார வளங்கள் சார்ந்த ஆக்கிரமிப்புகள் கொள்ளைகளை சர்வதேச நாடுகள் நிகழ்த்தாமல் இருந்திருந்தால்.இன்று வசதி படைத்த அதிகமான சர்வதேச நாடுகள் எமது நாடுகளில் கையேந்த வேண்டிய நிலைமை உருவாகி இருக்கும்.

யுத்தத்திற்கு முன் வடக்கு கிழக்கில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சர்வதேச சக்திகள் நாங்கள் அழிந்து கொண்டிருக்கும் பொழுது கண்டு கொள்ளாதவர்கள் வேடிக்கை பார்த்தவர்கள் இன்று தமது கழுகுப் பார்வைகளை வடக்கு கிழக்கு பக்கம் திருப்ப தொடங்கி உள்ளார்கள்.

ஏன் எதற்கு என்பதை சிந்திக்க தொடங்குங்கள் மீண்டும் ஒரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்.


-தரன் ஸ்ரீ-

அண்மைய பதிவுகள்