தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தங்களது தலைவர்கள் யார் என்பதை அறிவிக்கவும்.-- வேட்பாளர் எமில் காந்தன் கேள்வி
தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தங்களது தலைவர்கள் யார் என்பதை ஒரு கிழமைக்குள் அறிவிக்க வேண்டும்.
அதன் பிறகு சுயேட்சை குழுக்களையும் ஏனைய அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கலாம் என்று வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைகுழு 7 இன் தலைமை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்ற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..
நாங்கள் புதிய ஒரு அரசியல் மாற்றத்திற்காக கட்சியினை ஆரம்பித்து பதிவு செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்க இருந்த நிலையில் விரைவாக ஒரு தேர்தல் வந்தமையால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது திடீர் என்று உருவாக்கப்பட்ட ஒரு அணி அல்ல.
அந்த வகையில் மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் சுயேட்சை குழுக்கள் எல்லாம் மாரி காலத்தில் கத்தும் தவளைகள் என்றும் வாக்குகளை உடைத்து பிரதிநிதித்துவத்தை குறைப்பதுவுமே அவர்களது நோக்கம் என்றும் கூறுகின்றார்.
அவர் ஒன்றை மறந்துவிட்டார், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக் கட்சியில் தற்போது தலைவர் யார் என்பதை அவர் எமக்கு முன்னிலைப்படுத்தி அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எனது தலைமையிலான சுயேட்சைக் குழுவுடன் பகிரங்க விவாதத்திற்கு அவரது கட்சியின் தலைமையோடு வருமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.
கட்சிக்கே ஒரு தலைவரை அறிமுகப்படுத்த முடியாத வேட்பாளர்கள் சுயேட்சை குழுக்களைப் பற்றி விமர்சிக்கின்றனர்.
அதேபோல தாங்கள் மட்டும் தான் உரிமை அரசியலைப்பற்றி கதைக்கிறோம் ஏனைய அனைவரும் இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்ற பிரச்சாரத்துக்கு வலுச்சேர்ப்பவர்களாம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஒரு இனம் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்றால் பொருளாதார அபிவிருத்தியையும் தண்ணிறைவையும் கொண்டிருக்க வேண்டும்.
அது இருந்தால் அந்த இனம் உரிமையில் வெல்லமுடியும். இது இரண்டும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டிய விடயம்.
கடந்த காலங்களில் உரிமை அரசியலை பற்றி பேசிய இவர்கள் எல்லாம் அதன் விளைவு பற்றியும் நடந்து முடிந்தது என்ன என்பது பற்றியும் பதிலளிக்க வேண்டும்.
எமது சுயேட்சைகுழுவின் விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்து விடயங்களும் நடந்தால் உரிமை அரசியலை மக்கள் தானாகவே பெற்றுக் கொள்ளமுடியும்.
சிவசக்தி ஆனந்தனிடம் கேட்கிறேன் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் யார் என்று கூறுங்கள்.
இந்த சுயேட்சை குழுவிற்கு நான் தலைமை தாங்குகின்றேன். உங்களது தலைமை யார் என்று ஒரு கிழமைக்குள் அறிவியுங்கள்.
தலைவர்களையே நியமிக்க முடியாத நீங்கள் அரசாங்கத்திடமோ சர்வதேசத்திடமோ சென்று இனப்பிரச்சனையை எப்படித் தீர்க்கப்போகிறீர்கள்.
நாம் ஏனைய கட்சிகளை விமர்சித்து அரசியல் செய்யவரவில்லை. ஆனால் எமது மக்கள் நொந்துபோயுள்ளனர்.
வன்னியில் குடிதண்ணிஇன்றி அதிகமான மக்கள் துன்பப்படுகின்றனர்.
கடந்த காலங்களில் ஒன்றாக இருந்த தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் கூட்டணி ஆகிய நீங்கள் இதற்கு என்ன விடை கண்டீர்கள்.
எனவே மக்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது. வாக்கை பெறுவதற்காக மக்களை பிழையாக வழி நடாத்த வேண்டாம்.
அன்று மக்கள் பொருளாதாரத்தில் நிறைவு கண்டிருந்தார்கள்.அதனால் இந்த அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் ஊக்கம் கொடுத்து அவற்றை வளர்க்க முடிந்தது.
எனவே எமது உரிமையை நாம் அடைவதற்கு பொருளாதார தண்ணிறைவை காணவேண்டும். இல்லாவிடில் அந்த இலக்கை அடையமுடியாது.
எனவே தயவு செய்து மக்களை பிழையாக வழி நடாத்தாதீர்கள் மக்களை முன்னேற்றுங்கள் உங்களால் செய்ய முடியாவிடில் ஏனையவர்களுக்கு வழிவிடுங்கள்.
காழ்ப் புணர்ச்சியில் செயற்ப்பட வேண்டாம் என்றார்.