யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 21 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக சிறுவர் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே, கடந்த ஒரு மாதத்துக்குள் மாவட்ட ரீதியாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வேலணை பிரதேச செயலர் பிரிவில் இளவயதுக் கர்ப்பத்துடன் மூன்று சிறுமிகள் அவதானிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர்ப் பிரதேச செயலாளர் பிரிவில் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடு ஒன்றும் போதைப் பொருள் பாவனை மூலம் ஒரு துன்புறுத்தல் முறைப்பாடும், உடலியல் துன்புறுத்தலாக ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் பெற்றோரால் புறக்கணிப்புச் செய்யப்பட்டதாகத் தெரிவித்து 3 முறைப்பாடுகளும், சங்கானையில் ஓர் உடலியல் துன்புறுத்தல் முறைப்பாடும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு உடலியல் துன்புறுத்தல் முறைப்பாடும், கோப்பாயில் 3 இளவயதுத் திருமணமும், ஒரு பாலியல் துஷ்பிரயோகமும், 3 உள ரீதியிலான துன்புறுத்தலும், சாவகச்சேரியில் பிள்ளை பராமரிப்பின்மை தொடர்பில் ஒரு முறைப்பாடும், பருத்தித்துறையில் ஒரு பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுவர்களை உளவளத்துணைக்கு உட்படுத்துதல், நன்னடத்தை உத்தியோகத்தரிடம் கையளித்தல், சட்ட ஆலோசனை வழங்கல், பாடசாலைகள் மற்றும் சிறுவர் இல்லங்களில் இணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.