இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் சிக்கியிருந்தவர்கள் இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்
இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.
கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர்.
இவ்வாறு, இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், அந்நாட்டில் 6 மாதக் காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது.
இவர்கள் தீவில் இருந்த காலப் பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகாமுக்குள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக 'பிபிசி' தெரிவித்துள்ளது.
என்றாலும், மூன்று பேர் மீது மட்டும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து Diego Garcia தீவிலேயேதான் வைக்கப்பட்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.