இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஹெவ்லொக் வீதியிலுள்ள சொகுசு வீடொன்றில் வைத்து இணைய மோசடிக்காரர் 58 பேர் கைது

2 months ago



இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (08) பிற்பகல் ஹெவ்லொக் வீதியிலுள்ள சொகுசு வீட்டுத் தொகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட 58 சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெவ்லொக் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து சட்டவிரோதமான முறையில் இணையத்தில் பணம் மோசடி செய்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை அதிகாரிகள் அந்த இடத்தை சுற்றிவளைத்து 58 சந்தேக நபர்களை கைது செய்ததுடன் அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ,

"இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகத்திலிருந்தே இந்த முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

கொரியாவில் உள்ள கொரிய பிரஜை ஒருவரின் பணம். இலங்கை நாணயத்தின் அடிப்படையில் சுமார் 30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது."

"அதன்படி நேற்று இந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த இடமானது மாத வாடகையாக 90 இலட்சம் ரூபாவுக்கு மேல் செலுத்தி நடத்தப்பட்டு வந்துள்ளது."

"பின்னர், இது இணைவழி ஊடாக பணம் பறிக்கும் முகாமாக செயற்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது."

"கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பணிப்பாளராக பணிபுரியும் கொழும்பு 07 பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணும், முகாமையாளராகப் பணிபுரியும் 40 வயதுடைய றாகம பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்."

"இதில் வேறு சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த இடம் வெளிநாட்டில் இருந்து வெளிநாட்டவர்களால் இது நடத்தப்பட்டதாக தகவல் உள்ளது. அவர்களின் இலக்கு வெளி நாடுகளில் உள்ளவர்களாகும்." என்றார்.