ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுக்களில் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு.
ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுக்களில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
ரஷ்யாவின் விளாடிவோஸ் டோக் நகரில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்வில் பங்கேற்ற புடின், "ரஷ்யா, உக்ரைனுடன் பேச்சுகளை நடத்தத் தயாரா என்று கேட்டால், அமைதிப் பேச்சுகளுக்கு நாங்கள் ஒரு போதும் மறுத்ததில்லை. ஆனால் சில இடைக்கால கோரிக்கைகளின் அடிப்படையில் அல்ல, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேச்சுகளின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பேச்சுகள் நடத்தப்பட வேண்டும்.
நாங்கள் ஓர் உடன்பாட்டை எட்ட முடிந்தது. அதுதான் மையப் புள்ளி. இந்த ஆவணத்தை துவக்கிய உக்ரைனிய தூதுக்குழுவின் தலைவரின் கையொப்பம் இதற்கு சாட்சியமளிக்கிறது. அதாவது, எட்டப்பட்ட ஒப்பந்தங்களில் உக்ரைனிய தரப்பு திருப்தியடைந்துள்ளது.
ஆனால், அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் உயர் தலைவர்களின் குறுக்கீடு காரணமாகவே அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை. ரஷ்யா தோல்வியடைய வேண்டும் என்று அவர்கள் விரும்பியதால், ஒப்பந்தத்தை ஏற்க வேண்டாம் என்று அவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே அது நடைமுறைக்கு வரவில்லை" என்று புடின் கூறினார்.
ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுக்களில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தி யஸ்தர்களாக செயல்பட முடியும் என்றும் புடின் தெரிவித்தார். புடினின் இந்தக் கருத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மொஸ்கோ மற்றும் கீவ் பயணத்தைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.