38 வருடமாகியும் மகிந்தபுரம் படுகொலைக்கு நீதியில்லை

6 months ago

ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை கொண்டுசென்ற அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு 38 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லையென படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கிக் கொண்டுசென்ற போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்ட 38 ஆவது நினைவுதினம் நேற்றுப் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

நாட்டில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருத்தனர்.

இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அரசாங்கத்தால் வெருகல் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்தன.

அந்த வகையில் 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அகதிகளுக்கான நிவாரணங்களை ஏற்றிச் செல்லுமாறு அப்போது மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வரணசூரியவால் மக்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முகாம்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21 பேர் வண்டில் மாடுகளுடன் வெருகல் நோக்கிச் சென்றர்.

அங்கிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கிச் சென்ற போது மகிந்தபுரவில் வைத்து இராணுவத்தினரால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு பிரதான வீதியிலிருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு முழங்காலில் இருக்க வைத்து பின்னர் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்