கிளிநொச்சியில் பிணக்குகள் அற்ற காணிகளுக்கு உறுதிகளை வழங்க நடவடிக்கை.-- கிளிநொச்சி பதில் மாவட்டச் செயலர் முரளிதரன் தெரிவிப்பு

1 week ago



கிளிநொச்சி மாவட்டத்தில் பிணக்குகள் அற்ற காணிகளுக்கு உறுதிகளை விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி பதில் மாவட்டச் செயலர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றபோது, பலர் காணி உறுதிகளின்றி பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் இதன் காரணமாக வீட்டுத்திட்டம் முதல் பல நன்மைகளைப் பெறுவதில் இடையூறுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கிளிநொச்சி பதில் மாவட்டச் செயலர் தெரிவித்ததாவது:-

நாம் ஒரு காணியை ஆராய்வதற்கு சென்றால் அந்தக் காணியில் 1970ஆம் ஆண்டு உரிமையாளர் ஒருவர் இருந்திருப்பார்.

அவர் இன்னுமொருவருக்கு விற்றுவிட்டு சென்றிருப்பார்.

இதனைக் கொள்வனவு செய்த மூன்றாம் தரப்பு குறித்த காணியில் வீட்டைக் கட்டி வாழ்ந்து வருவார்.

இத்தகைய நெருக்கடிகளால் காணி உறுதிகளை வழங்குவதில் சிக்கல்நிலை காணப்படும்.

எந்தவிதப் பிரச்சினைகளும் அற்றவர்களுக்கு காணியை வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கைகளை எடுப்போம்.

அத்துடன் 1952, 1953, 1954, 1958 ஆண்டு காலப்பகுதிகளில் மலையகத்தில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு குடியேற்றப்பட்டவர்களின் காணிப் பிரச்சினைகளும் கவனம் செலுத்தப்படும்.

அத்துடன் காணிப் பிணக்குகளை நிவர்த்தி செய்வதற்கு நடமாடும் சேவைகள் நடத்தப்படும் - என்றார்.

அண்மைய பதிவுகள்