ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் சங்குச் சின்னத்தில் சேர்ந்து களமிறங்க 9 கட்சிகள் இன்று கொள்கையளவில் பூர்வாங்க இணக்கம் கண்டன

1 month ago



விரைவில் நடைபெறப் போகும் உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகிய இரண்டும் தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் தரப்புக்களும் ஒன்றுபட்டு ஓரணியில் செயற்படுவதற்கும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் சங்குச் சின்னத்தில் சேர்ந்து களமிறங்கவும் இன்று கொள்கையளவில் பூர்வாங்க இணக்கம் கண்டன.

இன்று முற்பகல் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள ஜொலி மண்டபத்தில் நடைபெற்ற இக்கட்சிகள் மற்றும் தரப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு பூர்வாங்க இணக்கம் காணப்பட்டதாக அறிய வந்தது. 

இந்தக் கூட்டணியில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக தமிழரசு கட்சி, சமத்துவ கட்சி ஆகிய 9 கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன என்று கூறப்பட்டது.

தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய கலந்துரையாடலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி. ரவீந்திரா (வேந்தனி), தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப் பினர் சபா குகதாஸ், ஜனநாயக தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மற்றும் சமத்துவ கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட இன்னும் சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

சமத்துவக் கட்சி சார்பில் சந்திரகுமார், நீதியரசர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மணிவண்ணன், ஜனநாயக தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணி தவராஜா சார்பில் நாவலன், சரவணபவன் சார்பில் பிரதாப் போன்றோர் பங்குபற்றினர் எனத் தெரியவருகிறது.

கூட்டத்தில் பங்கு பற்றிய அருந்தவபாலன் ஆசிரியர் தாம் தனி மனிதராக இருந்தாலும், தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் முயற்சிக்குத் தமது முழு ஒத்துழைப்பையும் தாம் வழங்குவார் எனத் தெரிவித்து உரையாற்றி விட்டுப் புறப்பட்டார்.

விக்னேஸ்வரனின் கட்சியில் பங்கு பற்றிய மணிவண்ணன் இவ்விடயத்தில் கட்சியின் செயலாளர் நீதியரசர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடிப் பதில் கூறுவதாக தெரிவித்து வெளியில் சென்றார்.

எனினும் தொலைபேசியில் நீதியரசர் விக்னேஸ்வரனுடன் உரையாடிய பின்னர் பொது இணக்கப்பாட்டுக்குத் தாங்களும் சம்மதிக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டார்.

ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் பங்கு பற்றிய ஆசிரியர் தயாளனும் ஆசிரியர் கஜேந்திரனும் இந்த இணக்க ஏற்பாட்டுக்கு தங்கள் தரப்பின் கொள்கை அளவிலான சம்மதத்தைத் தெரிவித்தனர் என்றும் எனினும் தமது இயக்கத்துடன் கலந்து பேசி முடிவைத் தெரிவிப்பார்கள் என கோடி காட்டினர் எனக் கூறப்பட்டது.

பொது இணக்கத்துடன் செயற்படுவது தொடர்பில் இலங்கைத் தமிழரசு கட்சியுடனும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸூடனும் தொடர்ந்து பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் என்று இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றிய ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் பிரமுகர்கள் தெரிவித்தனர்.