ஆறு.திருமுருகனின் சிறுவர் இல்லத்தை மூடுமாறு உத்தரவு

6 months ago

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான கலாநிதி ஆறு. திருமுருகனால். யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் நடத்தப்பட்டுவரும் துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும், இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகளிர் இல்லத்தில் பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராக்களால் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், 

இதனால் சிறுமிகளின் உரிமை மீறப்படுவதாகவும். அவர்கள் சமூகச் சீரழிவுகளை எதிர்கொள்வதாகவும் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்தே குறித்த இல்லத்தை மூடும் உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார். மற்றைய இல்லம் முறையான அனுமதி பெறப் படாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது:-

ஆறு. திருமுருகனால் நடத்தப்பட்டு வரும் மகளிர் இல்லத்துக்கு கடந்த மே மாதம் 29 சிறுமிகள் மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளாவர். சிறுமிகளுக்கான விடுதியில் தங்கவைக்கப்பட வேண்டிய அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோரைத் தங்கவைக்கும் பெண்கள் விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த விடுதியில் 10 குளியலறைகள் காணப்படுகின்றபோதிலும், அவை அனைத்தும் விடுதிப் பராமரிப்பாளர்களின் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. சிறுமிகளுக்கு வெளிப்புறமாக நீர் நிரப்பப்பட்ட தொட்டியொன்றே குளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிறுமிகள் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியே கண்காணிப்புக் கமராவால் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாம் குளிக்கும் இடத்துக்கு மேற்புறமாக கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருப்பதை அவதானித்த சிறுமிகள், அதுதொடர்பில் தமதுபெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். விடயம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் இல்லத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீதியைப் பதிவுசெய்வதற்காகவே கமரா பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வீதியைப் படமாக்கும் கோணத்தில் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவு செய்யப்படுவதாகத் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. இது தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் ஜூன் மாதம் 12ஆம் திகதி முறையிடப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் 24ஆம் திகதிவரை அவர் இதற்குரிய நடவடிக்கையோ அல்லது விசாரணையோ மேற்கொள்ளவில்லை. 

இதன் பின்னர் மேலிடங்களுக்கும், ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்கும் அபயம் பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் சில அதிகாரிகள் கள விசாரணைக்காகச் சென்றுள்ளனர். இதன்போது, 2023ஆம் ஆண்டு பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமையவே கமரா பொருத்தப்பட்டதாக சிறுவர் இல்லத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், வீதியைக் கண்காணிக்கும் படியாகத்தான் கமரா பொருத்தும்படி தெரிவித்ததாகவும், மேற்படி சர்ச்சைக்குரிய இடத்தில்பொருத்துமாறு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான விரிவான அறிக்கை ஆளுநருக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அறிக்கைகளின் பிரகாரம் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அனுமதி பெறாத மற்றொரு இல்லத்தையும் மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. 

விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்மேற்பார்வை செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யாமல் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்கவேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார் . 

அண்மைய பதிவுகள்