ரஷ்யப் படையில் தமிழ் இளைஞர்கள் இணைப்பு தொடர்பில் விரைவில் உயர்மட்டப் பேச்சு.-- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் தெரிவிப்பு
ரஷ்யப் படையில் வடக்கின் தமிழ் இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டது தொடர்பில் விரைவில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார் .
ரஷ்யப் போரில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளவர்களை மீட்டுத் தருமாறு அவர்களது உறவினர்கள் நேற்று கொழும்பிலுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கலந்துரையாடல் வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே வடக்கின் தமிழ் இளைஞர்கள் மற்றும் ஏனைய இலங்கையர்கள் போரில் ஈடுப்டுத்தப்படுகின்றமை குறித்து ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
அத்துடன், குறித்த முகவர்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.