யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகிறது.

3 months ago


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ். குடாநாட்டில் 17 தனியார் வைத்தியசாலைகள் இயங்கும் நிலையில் இதில் 8 வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக் கூடங்களும் உள்ளன.

அந்த தனியார் சத்திர சிகிச்சை நிலையங்களில் இடம்பெறும் சத்திர சிகிச்சைகளின்போது தேவைப்படும் குருதி அரச வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் இருந்தே செல்கின்றது. 

மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிக்கு அமைவாகவே இவ்வாறு அரச  வைத்தியசாலைகளில் சேரிக்கப்படும் குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவதாக தெரிய வருகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தியினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு 8596 பைந்து குருதி கிடைத்துள்ளது.இதில் 807 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 2023 ஆம் ஆண்டு 9043 பைந்து குருதி இரத்த வங்கிக்கு கிடைத்துள்ளது.இதில் 875 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் யூன் மாதம் 30 ஆம் திகதி வரையான அரையாண்டு காலப்பகுதியில் 4113 பைந்து குருதி வைத்தியசாலைக்கு கிடைத்துள்ள நிலையில் இதிலிருந்து 441 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.   

2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் யூன் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 2 ஆயிரத்து 23 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 1507 பைந்து குருதி ஒரு தனியார் வைத்தியசாலைக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மேலும் 209 பைந்து குருதி மற்றுமொரு தனியார் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது.