காஸா சிறுவர்களுக்காக நிதிதிரட்டும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு, இறுதிப்போரில் தமிழ்க்குழந்தைகளைக் கொல்லும்போது இரக்கம் வரவில்லையா? என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளால் வவுனியா பேருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கும், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் சர்வதேச நீதியைக்கோரி நாம் தொடர்ச்சியாகப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
எமது போராட்டங்களைத் தடுக்கும் விதத்தில் பல்வேறு அடக்குமுறைகள் இந்த அரசாங்கத்தால் பிரயோகிக்கப்படுகின்றது. எனினும் நீதிக்கான எங்களின் பயணம் தொடரும்.
காஸாவில் இடம்பெற்றுவரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட காஸா நிதியத்துக்கு ஜனாதிபதியால் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை தமக்கான சர்வதேச ஆதரவைத் திரட்டும் அரசாங்கத்தின் நடவடிக்கையாகவே பார்க்கவேண்டும்.
ஏனெனில் எமது தமிழ் சிறுவர்கள் பலரை இறுதிப் போரின்போது கையில் ஒப்படைத்திருந்தோம்.
அதேபோல இறுதிப்போரில் எத்தனை அப்பாவி தமிழ்க்குழந்தைகளைக் கொலைசெய்தனர்.
அப்போதெல்லாம் இவர்களுக்கு இரக்கம் வரவில்லையா?
போரில் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து, அவயவங்களை இழந்த பிள்ளைகளை இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?
தாங்கள் நடத்திய போர் என்ற படியால் அது அவர்களின் கண்ணுக்குத் தெரியவில்லை - என்றனர்.