இலங்கை ஜனாதிபதிளுக்கு வழங்கும் சலுகைகள் அதிகம், இலங்கை மக்களிடையே பாரபட்சம் மற்றும் ஏற்றத்தாழ்வை மேலோங்கச் செய்கின்றது என்பதே உண்மை.
க.பிரசன்னா
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் நீண்டு செல்லும் நிலையில் தொடர்ச்சியாக அவர்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியொதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை குறைப்பது தொடர்பான வாதம் தேர்தல் மேடைகளில் பெரிதும் முன்னெடுக்கப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
எனினும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம், கையடக்க தொலைபேசி கட்டணம் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் கடந்த வருடம் தீர்மானித்திருந்தது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் அலுவலகம் இந்த பணிப்புரையை வழங்கியிருந்தது.
தீர்ப்பின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான நிதி மட்டுமே வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் வரப்பிரசாத சட்டத்தின் அடிப்படையில், வாழ்நாள் முழுவதும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லம் அல்லது அதற்கு சமமான உதவித்தொகை, செயலாளருக்கான கொடுப்பனவு, உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் அமைச்சரவை அமைச்சருக்குரிய சலுகைகள், முன்னாள் ஜனாதிபதிகளின் விதவை மனைவிகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு வரையான தேறிய ஒதுக்கீடுகளாக 37 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் 22.6 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம், அலுவலகம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 41.28 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த வருடத்தை விடவும் 4 மில்லியன் ரூபா அதிகமாகும். இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையின் ஜனாதிபதியாக 1994 நவம்பர் 12 தொடக்கம் 2005 நவம்பர் 19 ஆம் திகதி வரை பதவி வகித்துள்ளார்.
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா வீதம் மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை மாதாந்தம் 97,500 ரூபாவை மாதாந்த ஓய்வூதியமாக பெற்றுக்கொள்கிறார்.
இதற்கு மேலதிகமாக அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும் எரிபொருள் கொடுப்பனவாக ஐந்து இலட்சம் ரூபாவும் வழங்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 19 நவம்பர் 2005 முதல் 9 ஜனவரி 2015 வரை இலங்கையின் ஜனாதிபதியாக கடமையாற்றியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் பிரதமர், முன்னாள் ஜனாதிபதி ஆகிய பதவிகளுக்குரிய ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்கின்றார்.
ஜனாதிபதிக்கான ஓய்வூதிய கொடுப்பனவாக 2015 ஜனவரி மாதத்திற்காக 71,500 ரூபா பெற்றுக்கொண்ட நிலையில் அதன் பின்னரான காலப்பகுதியில் அவருக்கு மாதாந்தம் 97,500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு மேலதிகமாக அலுவலக கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபாவும் எரிபொருள் கொடுப்பனவாக 704,100 ரூபாவும் வழங்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 9 ஜனவரி 2015 முதல் 18 நவம்பர் 2019 வரை இலங்கையின் ஜனாதிபதியாக கடமையாற்றியுள்ளார்.
அவருக்கு 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்காக 48,750 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் மாதாந்தம் 97,500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு மேலதிகமாக அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும் எரிபொருள் கொடுப்பனவாக 704,100 ரூபாவும் வழங்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 18 நவம்பர் 2019 முதல் 14 ஜூலை 2022 வரை இலங்கையின் ஜனாதிபதியாக கடமையாற்றியுள்ளார்.
அவருக்கு 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்காக 56,612.90 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் மாதாந்தம் 97,500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு மேலதிகமாக அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும் எரிபொருள் கொடுப்பனவாக 704,100 ரூபாவும் வழங்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் விதவை மனைவிக்குரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கையின் அடிப்படையில், திருமதி ஹேமா பிரேமதாசவுக்கு 2015 ஆம் ஆண்டு வரை 21 வருடங்களாக மாதாந்தம் 16,666.67 ரூபா வழங்கப்பட்ட நிலையில் அதன்பின்னர் இன்று வரை மாதாந்தம் 65,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கு மேலதிகமாக அலுவலக கொடுப்பனவாக 23 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. எரிபொருள் கொடுப்பனவு செலுத்தப்படவில்லை.
இவ்வாறு திருமதி ஹேமா பிரேமதாசவுக்கான முன்னாள் ஜனாதிபதியின் விதவை மனைவிக்குரிய வசதிகள் உள்ளடங்களாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு 2024 செம்டெம்பர் மாதம் வரை ஓய்வூதிய கொடுப்பனவாக மாத்திரம் 163.24 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கு மேலதிகமாக 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன்னர் தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் மூலம் வருடாந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை வழங்கும் போது முன்னாள் ஜனாதிபதியொருவருக்காக வேறு செலவுகளை மேற்கொள்வதற்கான செலவு விடயம் வழங்கப்பட்டுள்ளது.
அச்செலவு விடயத்தின் மூலம் செயலாளர் கொடுப்பனவு, நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துதல் ஆகியன மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியின் விதவை மனைவிக்காக செலவிடப்பட்ட செயலாளர் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு, நீர் மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை வெவ்வேறாக வழங்க முடியாதுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 2015 – 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதியின் விதவை மனைவிக்காக 153.14 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் 2023 ஜூலை மாதம் வரை 126.02 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் நாட்டில் நிலவிய கொவிட் தொற்று பரவல் காலப்பகுதி மற்றும் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் இவர்களுக்கு அதிகமான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை தகவல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.
எனினும் தற்போது முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் விதவை மனைவிக்காக நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள ஏனைய ஊழியர்களை போன்றே முன்னாள் ஜனாதிபதிகளும் தங்களுடைய பதவிக் காலத்தில் தங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
அவர்கள் பதவியிலிருந்து நீங்கிய பின்னரும் பொது நிதியிலிருந்து பாரிய சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்படுகின்றன.
இந்நிலைமை இலங்கை மக்களிடையே பாரபட்சம் மற்றும் ஏற்றத்தாழ்வை மேலோங்கச் செய்கின்றது என்பதே உண்மை.