ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற மேலும் பல அரசியல்வாதிகளின் விவரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

2 weeks ago



ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்ட மேலும் பல அரசியல்வாதிகளின் விவரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது விவரங்களை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தோம்.

2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுவரை பணத்தை பெற்றுக்கொண்டோரின் தகவல்கள் வெளியிடப்பட்டன.

அந்தக் காலப் பகுதியில் பணம் பெற்றுக் கொண்ட பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோரின் பெயர் விபரங்களையும் திரட்டி வருகிறோம்.

அதற்கு முன்னரான ஆவணங்களையும் பரிசீலிக்கிறோம்.

ஜனாதிபதி செயலகத்தில் சில ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் சிரமமாக இருக்கிறது.

எவ்வாறாயினும் அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது இரண்டு கடமைகள் உள்ளன.

ஒன்று ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்ட ஏனைய அரசியல்வாதிகளின் பெயரை வெளியிடுவது மற்றையது எதிர்க்கட்சித் தலைவரின் கல்வித் தகைமையை பரிசீலிப்பது ஆகியனவாகும்-என்றார்.