கடந்த ஆட்சியில் படுகொலையாளிகள் கூட விடுதலை, விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது எம்.பி ஞா.சிறீநேசன் கேள்வி

2 hours ago



கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வட கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டமானது மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த சிறீநேசன் மேலும் கூறுகையில்,

பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற, எமது விடுதலைக்காக போராடிய தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிற அறவழிப் போராட்டத்தை தற்போது முன்னெடுத்திருக்கின்றனர்.

பயங்கரவாத தடைச் சட்டம் எனும் பெயரில் மிக மோசமான, மனித குலத்துக்கு எதிரான சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் மூலம் அப்பாவிகளை கூட பயங்கரவாதிகள் என்ற பார்வைக்கு உட்படுத்தப்படும் மிக மோசமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த சட்டத்தை நீக்குவோம் என்னும் உத்தரவாதத்தை வழங்கியும் கூட இன்னும் அந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை.

இந்த நிலையில், இந்த கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது பத்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும்.இவர்கள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் நாட்களை கழித்து விட்டார்கள்.

இருக்கும் காலத்திலாவது தமது உறவுகளுடன் இணைந்து வாழ்வதற்கு மாற்றத்தை உருவாக்கப் போவதாகக் கூறும் புதிய அரசாங்கம் அதனை செய்ய வேண்டும் - என்றார். 

அண்மைய பதிவுகள்