சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர்.- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர். அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிக்கையில்,
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக் கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றார்கள். சுமந்திரன், சாணக்கியன், CVK சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
அது மாத்திரமல்ல, அவர்கள் களத்தில் இறங்கி பணிபுரிவதற்கும் தயாராக இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியைச் சேர்ந்த பலரை சந்தித்து நான் பேசியிருக்கின்றேன்.
இதனை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த சிறீதரனும் பொது வேட்பாளரை வாழ்த்தியிருக்கிறார். ஏற்கனவே அதற்கான கூட்டங்களும் கிளிநொச்சியில் கூடப்பட்டிருக்கிறது.
அதேபோல தலைவராக இருக்கின்ற சேனாதிராஜாவும் இதனை வரவேற்றிருக்கின்றார். ஆகவே தமிழரசுக் கட்சியினுடைய பெரும்பான்மையானோர் இதனை ஆதரித்து வரவேற்றிருக்கிறார்கள்.
ஒரு சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்க்கின்றனர். குறிப்பாக சொல்லப் போனால், இலங்கை அரசாங்கம் அங்கு அபிவிருத்திக்காக தனக்கு பணம் கொடுத்ததாக சாணக்கியன் கூறியிருக்கின்றார்.
ஆகவே, வாங்கிய பணத்துக்கு பேச வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் யோசித்தால், அதற்காக அவர்கள் சில நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
கடைசி நேரத்தில் அவர்கள் என்ற முடிவு எடுப்பார்களோ என்று எனக்கு தெரியாது. நிச்சயமாக தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இவர்கள் ஆதரவு முடிவு எடுப்பார்களாக இருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முடிவாகத்தான் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் வகையில் தமிழ் தேசியக் கட்சிகளும், சிவில் அமைப்புக்களுமாக ஒன்றாக இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள்.