ஹமாஸ் தலைவர் மீது தாக்குதல் நடத்திய போது எடுத்த ட்ரோன் வீடியோவை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டது.

2 months ago



ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் தங்கியிருந்த கட்டடம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது எடுத்த ட்ரோன் வீடியோவை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டது.

அதில் மரக் கட்டை ஒன்றை எடுத்து ட்ரோன் மீது யஹ்யா சின்வர் வீசி எறியும் காட்சி பதிவாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் கொல் லப்பட்டார்.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மக்கள் மீது 2023ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி நடத்திய தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் மட்டும் இஸ்ரேல் இராணுவத்திடமிருந்து தொடர்ந்து தப்பி வந்தார்.

மக்களோடு மக்களாக அவர்     கலந்திருந்ததால், அவர் பிடிபடவில்லை.

அவரை உயிரோடு அல்லது சடலமாக மீட்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் இராணுவம் சபதம் செய்திருந்தது.

இந்த நிலையில் தெற்கு காஸாவின் ரபா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் கடந்த புதன்கிழமை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு கட்டடம் அருகே சென்றபோது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதையடுத்து அந்த கட்டடத்தை இஸ்ரேல் இராணுவம் குண்டு வீசி தகர்த்தது.

இதன் பின் அந்த கட்டடத்துக்குள் யாரும் இருக்கிறார்களா? என்பதை அறிய ட்ரோன் பறக்கவிடப்பட்டது.

அப்போது, கட்டடத்தின் இடிபாடுகளுக்கு இடையே ஷோபா ஒன்றில் வயதான நபர் தனது முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தார்.

அவர் அருகே ட்ரோன் பறந்து சென்றபோது, அவர் ஒரு மரக் கட்டையை எடுத்து ட்ரோன் மீது வீசும் காட்சி பதிவாகியது.

இதையடுத்து அந்த கட்டடத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த நபர் பலியானார்.

அவர் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் என்பது பயோமெட்ரிக் ஆவணங்கள் மூலம் உறுதி          செய்யப்பட்டன.

ட்ரோன் மீது யஹ்யா சின்வர் மரக்கட்டையை தூக்கி வீசும் வீடியோவை சமூக ஊடகத்தில் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.