குடித்தொகையை மாற்றியமைக்க முயற்சி - பேராசிரியர் பத்மநாதன் தெரிவிப்பு

7 months ago

நவநாசிச பாணியில் பல அரசதுறைகள் பலம் பொருந்தியவர்கள் மற்றும் செல்வாக்கு பொருந்தியவர்களுடன் குடித்தொகையை மாற்றியமைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது என்று பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பத்மநாதனின் 'ஒரு மறைந்துபோன நாகரிகத்தின் தரிசனம் ஆதிகால யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

தமிழ்த் தேசியத்தின் உற்பத்திக்கு அடிநாதமாகக் காணப்படும் மொழிவழக்கும், இடையறாத நிலப்பரப்பும் கிறிஸ்துவுக்கு முதல் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது.

இலங்கைத் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் முன்னோர்கள் நாகர்களின் வழிமுறைச் சந்ததியினரே.

19ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் கிடைத்த பின்னர் சிங்களத் தலைவர்கள், படித்தவர்கள், அரச சட்டசபையில் (ஸ்டேட் கவுன்ஸில்) இருந்தவர்கள், பக்குவமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தமிழர்கள் ஒரு தேசிய இனம். ஆதலால், நாட்டில் ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி அமையவேண்டும் என்றார்கள்.

நாங்கள் என்ன செய்தோம்? எட்டியும் பார்க்கவில்லை. இப்போது என்ன சொல்கின்றோம்? ஒஸ்லோ பிரகடனத்தில் எழுதப்பட்டுள்ளது என்கின்றோம்.

எங்களுடைய கோமாளித்தனம் தொடர்ந்து வந்ததனால் எங்கள் இருப்புக்கே பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

15 இலட்சம் தமிழர்கள் உள்ளனர். ஆனால், 17 கட்சிகள் உள்ளன. மலையகத்தில் உள்ள கட்சிகளுடன் சேர்த்தால் 24 கட்சிகள்.

இவற்றைக் கொண்டு எங்கே போகப்போகின்றோம்?

நாங்கள் தற்போது என்ன செய்யவேண்டும் என்றால் எமது இருப்பைப் பாதுகாப்பதற்கு என்னென்ன நிறுவனங்கள் உள்ளனவோ தற்போதைய அரசமைப்பின்படி என்னென்ன நிறுவனங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அவற்றைப் பயன்படுத்தி இயக்கவேண்டும்.

அவற்றின் மூலம் இந்த ஆவணங்களை தேடவேண்டும், தேடிப் பாதுகாக்க வேண்டும்.

அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும், காட்சிப்படுத்த வேண்டும்.

மீண்டும்  எங்களின் தேசிய உரிமையை, எழுச்சியை வளர்க்க வேண்டும்.

சர்வதேச ரீதியாகவும் சிங்கள மன்னர்களின் ஆட்சி வழக்கின் படியும், தமிழ் மக்களின் அரசுகள், பிராந்தியங்கள் தனித்துவமானவை.

அரசுரிமையில் இறைமையில் பங்குள்ளவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம். 

சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்கள்தான் அடக்கி வாசிக்கின்றார்கள். உள்ளதைச் சொல்வதற்குப் பயப்படக்கூடாது. ஒன்றுமட்டும் சொல்கின்றேன்.

தமிழீழம் என்ற பேச்சுக்கு இடமில்லை. எந்த ஒரு நாடும் ஆதரிக்காது. இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது என்றார்.