தமிழ் அரசுக் கட்சியின் எம்.பி மருத்துவர் ப.சத்தியலிங்கத்துக்கு எதிராக மத்திய குழு உறுப்பினர் சி.சிவமோகன் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல்

2 weeks ago



இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்துக்கு எதிராக கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.சிவமோகன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்பை மீறி, செயலாளர் செயற்பட முடியாது என்பதனால், கட்சியின் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க முடியாது எனவும், அதற்கான நீதியைப் பெறவே, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்று (18) வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

தமிழரசுக் கட்சியின் யாப்பின் அடிப்படையில் மத்திய குழு உறுப்பினர்கள் எவரையும் நிறுத்துவதற்கு அதிகாரம் இல்லை.

மூலக்கிளை, பிரதேசக் கிளையில் எவரேனும் தவறு செய்திருந்தால் மாத்திரமே அது தொடர்பான    முறைப்பாடு கிடைத்தால் நிறுத்துவதற்கான அதிகாரம் இருக்கின்றது.

அதை விடுத்து மத்திய குழுவில் இருக்கும் யாரையும் நிறுத்துவதற்கு செயலாளருக்கு அதிகாரம் இல்லை.

அது தவிர தமிழரசுக் கட்சிக் கூட்டம் கூடுவதாக இருந்தால் தலைவரின் கலந்துரையாடலோடு நிகழ்ச்சி நிரலை அனுப்பி அதை தலைவர் ஏற்றுக் கொண்டு கூட்டம் கூடுவதற்கு அனுமதியை பெற வேண்டும்.

அந்த நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் கூட்டத்தை நடத்தலாம் எனத் தலைவர் கூறியதன் பின்னரே கூட்டம் கூடலாம்.

அத்துடன் தலைவரின் அனுமதிக்கு பின்னரே ஏனையவருக்கும் அந்த நிகழ்ச்சி நிரலையும் கூட்டத்துக்கான அழைப்பையும் அனுப்பலாம். இவ்வாறு தான் யாப்பு கூறுகின்றது.

தலைவர் கட்சியை வழிநடத்துபவர். செயலாளர் என்பவர் கூறுவதைச் செய்பவராக தான் இருப்பார்.

இவ்வாறு தெளிவாக யாப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே யாப்பை மீறி அனைத்தையும் செயல்படுத்த விட முடியாது.

அதனை மையப்படுத்தியே யாழ் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்திருந்தேன் என்றார்.