மலையக, முஸ்லிம் மக்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றை தமிழ்ப் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என்று எம்.பி க.வி. விக்னேஸ்வரன் தெரிவிப்பு.
மலையக, முஸ்லிம் மக்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றை தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் சின் னமான சங்கு சின்னத்துக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவர். அவர் மலையக மக்களை சகோதர, சகோதரிகளாகவே நேசிக்கின்றார்.
மலையக மக்கள் அவர் சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் வாக்க ளிப்பதை அவர் மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். தமிழர்கள் என்ற ரீதியில் மலையகத் தமிழர் ஒவ்வொரு வரும் தமது மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை அவருக்கு அளிப்பதை அவர் கட்டாய மாக மனம் உவந்து ஏற்றுக் கொள்வார்.
ஆனால், வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்னைகள் வேறு - மலையக சகோதர, சகோதரிகளின் பிரச்னைகள் வேறு. எனினும், நாம் யாவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்று சேரலாம்.
அதில் தவறில்லை. அது மட்டுமல்ல. 1977ஆம் ஆண்டு காலத்தில் மலையகத்தில் முடுக்கிவிடப்பட்ட கலவரங்கள் காரணமாக அங்கிருந்து இடம் பெயர்ந்து வந்த பல மலையகத் தமிழர்கள் வன்னி மாவட்டத்தில் குடியேறியுள்ளார்கள்.
இப்போது அவர்கள் எங்கள் மக்கள். வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பாரம்பரிய உரிமைகள் அவர்களையும் சாரும்.
ஆகவே, தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் எமது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க முன்வர வேண்டும். அவர்கள் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதை நாம் மனமகிழ்வுடன் வரவேற்கின்றோம்.
வட, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே இன்று ஒரு மறுமலர்ச்சி பரிணமித்திருக்கின்றது.
உலக அரங்குகளில் எமது குரல் ஓங்கி ஒலிக்க நாம் ஒரு பலமான மக்கள் கூட்டம் என்ற உண்மையை நிலைநிறுத்துவது அவசியம்.
இவ்வாறான ஒரு தமிழ் மொழி சார்ந்த ஈடுபாடு மலையகத்திலும் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே.
நாம் யாவரும் தமிழ்த் தாயின் மக்களே என்ற உணர்வை இந்த ஈடுபாடும் நிலைப்பாடும் ஏற்படுத் துகின்றன.
அண்மையில் 30க்கும் மேற்பட்ட மலையக புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பாட சாலை அதிபர்கள் போன்றோர் அரிய நேத்திரனுடன் இணையவழியில் தொடர்பு கொண்டு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
தாம் யாவரும் ஒன்றுபட்ட தமிழினமாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதாகவும் மற்றும் மலையகத்தில் அவரை ஆதரித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர்.
அத்துடன் பொது வேட்பாளரை மலையகத்துக்கு மக்கள் சந்திப்புக்காக அழைத்துள்ளனர்.
பொது வேட்பாளரும் அவர்கள் கூட் டத்தில் பங்குபற்ற ஒத்துக் கொண்டுள்ளார்.
நான் தொடக்கத்தில் இவ்வாறாகக் கோராததற்குக் காரணம் கிழக்கிலங்கை முஸ்லிம் தலைவர்கள் பலர் வட, கிழக்கு இணைப்பை ஏற்க மறுக்கின்றார்கள்.
மற்றும் மலையகத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் நாம் எமது பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் எமது அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்துவதை அவ்வளவாக வரவேற்கவில்லை.
பெரும்பான்மை வேட்பாளர்களுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
ஆனால், இப்போது எமது மலையக சகோதர, சகோதரிகளும், கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் நாம் யாவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்று சேர விரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.
பொது வேட்பாளர் கட்டாயமாக வட, கிழக்கு பிரமுகர்களை மலையக பிரசாரப் பணிகளுக்காக அனுப்பி வைப்பார் என்று நம்புகின்றேன் - என்று குறிப்பிட்டுள்ளார்.