யாழ்ப்பாணத்தில் உள்ள வளித்தரக் கண்காணிப்பு நிலையம் சுமார் ஒரு மாதம் வரை இயங்காத நிலையில் உள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள வளித்தரக் கண்காணிப்பு நிலையம் சுமார் ஒரு மாதம் வரை இயங்காத நிலையில் உள்ளது.
அதனை மீளச் செயற்படுத்துவதற்கு இன்றையதினம் கொழும்பில் இருந்து குழு வொன்று வருகைதரவுள்ளது.
காற்றின் தரம் தொடர்பில் ஆராயுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்தே, அந்தக் கண்காணிப்பு நிலையத்தை இயங்க வைக்க மேற்படி குழுவினர் கொழும்பில் இருந்து வருகை தரவுள்ளனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையால் யாழ். மாவட்டத்தின் காற்றுத் தரம் தொடர்பில் ஆராய பருத்தித்துறை, யாழ். மாவட்ட செயலக வளாகம் மற்றும் யாழ்ப்பாணம் பழைய பூங்கா என மூன்று இடங்களில் காற்றின் தரத்தை அளவிடுகின்ற வளித்தர கணிப்பு நிலையம் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காற்றின் தரம் குறித்து ஆராயப்படுகின்றது.
இருந்த போதிலும் சுமார் ஒரு மாத காலத்துக்கு மேலாக யாழ். பழைய பூங்காவில் அமைந்துள்ள வளித்தர நிர்ணய நிலையம் இடி வீழ்ந்து இயங்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகாரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தக் கட்டமைப்பின் பராமரிப்புப் பணிகளே இன்று மேற் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.