இந்தியா - கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் வைத்தியசாலைகளில் சுமார் 100 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சுமார் 250 பேர் வரை மீட்கப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மண்சரிவில் மேலும் நூற்றுக்கணக்கானோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படை பெங்களூரிலிருந்து வயநாடு விரைந்துள்ளதுடன், வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவிகளை வழங்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
வயநாட்டின் அண்டை மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களிலும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.