விவாகரத்து வழக்குகளில் ஆண்களும் கொடுமையை எதிர்கொள்கின்றனர்-- கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தெரிவிப்பு
விவாகரத்து வழக்குகளில் ஆண்களும் கொடுமையை எதிர்கொள்கின்றனர் என கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவர் தமது விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு மீதான விசாரணையின் போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி, விவாகரத்து வழக்கை மாற்றக் கோரிய அந்தப் பெண்ணின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசர் நிராகரித்துள்ளார்.
ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்களாக இருப்பினும் அதற்காக பெண்களின் கொடுமையால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று அர்த்தமல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
"சமத்துவம் அதன் உண்மையான அர்த்தத்தில் இருக்க வேண்டும், இரு பாலினத்தையும் பாதிக்கக்கூடாது.
பெண்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை கவனிக்காமல் விடக் கூடாது," என்று நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் விளைவாக, வழக்கை மாற்றினால் பிரதிவாதி அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.