ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த் தேசியப் பேரவை எனும் அமைப்பு உதயமாகியுள்ளது என்று அரசியல் ஆய்வாளரும் தமிழ் மக்கள் பொதுச் சபை உறுப்பினருமான நிலாந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் நேற்று வவுனியாலில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளும், மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணைந்து கலந்துரையாடி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.
அந்த உடன்பாட்டின் அடிப்படையில் கட்சிகளும், மக்கள் பொதுச் சபையும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
அந்த பொதுக் கட்டமைப்பு தமிழ்த் தேசிய பேரவை என அழைக்கப்படும். தமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறும். இந்தக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக புரிந்துணர்வு உடன்படிக்கை கட்சிகளுக்கும், மக்கள் அமைப்புக்கும் இடையில் கைச்சாத்திடப்படும்.
அதன் பின் தேவையான உப குழுக்களை உருவாக்கி ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் செயல் பூர்வமாக முன்னெடுக்கப்படும்.
தமிழ்த் தேசியப் பேரவை எனும் பொது கட்டமைப்பு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தப் பொதுக் கட்டமைப்பு உப கட்டமைப்புக்களை உருவாக்கும்.
அதில் ஒன்று யார் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பதைக் கண்டுபிடிக்கும்.
இன்னுமொரு உப கட்டமைப்பு தேர்தல் அறிக்கை என்ன என்பதை இறுதி செய்யும் என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்று கூடி தங்களை ஒரு அமைப்பாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.
தற்போது இரு தரப்பும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாகத் தமிழ்த் தேசியப் பேரவையாக செயற்பட இணங்கியுள்ளன.
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு சார்ந்து தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவதாகத் தீர்மானித்துள்ளோம்.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தேவையான குழுக்கள் நிறுவப்படும்.
அந்தக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு பொது வேட்பாளர் விடயம் கையாளப்படும்.
அந்தவகையில் இது ஒரு முக்கியமான கூட்டம். தமிழ்த் தேசியப் பரப்பில் பெரும்பான்மையான கட்சிகள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளன.
பொதுக் கட்டமைப்பான தமிழ்த் தேசியப் பேரவைதான் இனி பொது வேட்பாளரைத் தெரிவு செய்யும்.
தேர்தல் பிரசாரத்தையும் அதுவே முன்னெடுக்கும். தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
இது அரசியல் மயப்படுத்தப்பட்ட விடயம்தான். எதிர்வரும் 6 ஆம் திகதிக்குப் பின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.