புலம்பெயர்ந்தவர் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பு - ஐ.நா ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் தெரிவித்துள்ளார்
'புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின்கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும்' என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் உள்ளிட்ட குழுவினர், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை நேற்றுமுன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் அதிகம் தேவைப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
புலம்பெயர் உறவுகள், வடக்கிலுள்ள தொழில்முனைவோருக்கான ஒத்துழைப்புகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னுரிமை வழங்க வேண்டிய திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சிறந்த பொறிமுறையின் ஊடாக முதலீடுகளை மேற்கொள்வது சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எவ்வாறான ஒத்துழைப்புகள் தேவை எனவும் அவர் இதன்போது வினவினார்.
மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுப்பது அவசியம் எனவும் ஆளுநர் கூறினார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின்கீழ் செயற்படும் சர்வதேச அமைப்புகள் வடக்கில் இதுவரையில் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், அனைத்துத் துறைகளுக்குமான அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளைத் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.