இலங்கைக் கடற்பரப்புக்கு ஊடுருவிய வேளை கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களில் இருவர் இலங்கை யைச் சேர்ந்தவர்கள் என்பதனால் அவர்களுக்குத் தனியான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் கடந்த மாதம் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் மூன்று படகுகளுடன் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் - இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட இந்த 22 மீனவர்களில் இருவர் இலங்கையர் எனவும். இலங்கையில் இருந்து படகு வழியாகத் தமிழகத்துக்குச் தப்பிச் சென்று இராமேஸ்வரம் பகுதியில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சுப்பிரமணியம் தீபன், சுப்பிரமணியம் சுதாகர் ஆகிய சகோதரர்களே கைது செய்யப்பட்டனர்.
1997ஆம் ஆண்டு போர் உச்சம் பெற்ற சமயம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று முகாமில் வசிக்கும் இவர்கள், தினக் கூலிக்காகத் தமிழக மீனவர்கள் படகில் பணியாற்றிய சமயம் தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய சமயம் இவர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினத்துக்கு வழக்குத் திகதியிடப்பட்டது.
இதற்கமைய நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சமயம் தமிழக மீனவர்கள் 20 பேரும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டனர் எனவும், இரு இலங்கை மீனவர்களும் அனுமதியற்று மீன்பிடியில் ஈடுபட்டனர் எனவும் இரு குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டபோது வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கமைய எதிர்வரும் 18 ஆம் திகதி 22 மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டாலும் இலங்கையைச் சேர்ந்த இருவரும் தமிழகம் திரும்ப அனுமதிக்கப்படும் சூழல் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.