உதய கம்மன்பிலவினால் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை உத்தியோகபூர்வமற்றது.-- அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமற்றது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபே சேகர ஆகியோரை தற்போதைய பதவிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்க அரசாங்கம் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறெனினும், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
உதய கம்மன்பில வேறு சிலரின் தேவைக்காக அறிக்கையொன்றை காண்பித்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் காலம் என்பதால் அவர் அவ்வாறு நடந்துகொள்கிறார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக அவர் கூறுகிறார்.
முதலில் அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகட்டும். அவர் சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்.
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையை அரசாங்கம் என்ற வகையில் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
அதனையே உதய கம்மன்பில சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கை உத்தியோகபூர்வ மற்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தேவைக்காகவே நீதிபதி அல்விஸ் தலைமையில் குழு உருவாக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் பிரதிகள் ஜனாதிபதி செயலகம், சட்ட மா அதிபர் திணைக்களம், பேராயர் இல்லம் உள்ளிட்டவற்றுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். அது பக்கசார்பின்றி மேற்கொள்ளப்படுகிறது.
அதில் இரு விடயங்களை நாம் பார்க்க வேண்டும்.
தாக்குதல் நடத்தியோர் பற்றியும் தாக்குதலை தடுக்கத் தவறியோர் பற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது.
அதன் பிரகாரம் குற்றவாளிகளாக அறியப்படுவோர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - என்றார்.