மீகொட, நாகஹவத்தையிலும், மருதானை மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திலும் துப்பாக்கிப் பிரயோகம் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்
மீகொட, நாகஹவத்தையிலும், மருதானை மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திலும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீகொட, நாகஹவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், மீகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர் தனது சகோதரரின் வீட்டிலிருந்து மீகொடவில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சனிக்கிழமை (14) காரில் சென்று கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரை இனந்தெரியாத நபர் ஒருவர் தடுத்து நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த போது பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் ஒன்றரை வயது மகளும் வாகனத்தில் இருந்தனர்.
மற்ற சம்பவம் மருதானை மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கொழும்பு- 13 யைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையின் பிரகாரம், கரையோர பொலிஸாரினால் இரண்டு பெண்கள், சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவ்விருவரும் மாளிகாந்த நீதவான் முன்னிலையில், சனிக்கிழமை (14) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அங்கு வந்த பெண்ணொருவரின் கணவன், அப்பெண்ணை பிணையில் எடுத்தார்.
அதன் பின்னர், அங்கிருந்து கணவனுடன் வெளியேறிய போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் துப்பாகிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவித்த மருதானை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.