நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் -அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை.
நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்பவேண்டுமாக இருந்தால் இந்த நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்-
அநுரகுமாரவும் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடிய ஒருவராக இருக்கின்றார். அவர்கள் சோசலிசவாதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டிருந்தாலும் துரதிஷ்டவசமாக அவர்களது அமைப்பு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு கடந்த காலங்களில் முழுமையாக துணை நின்றது.
ஒன்றரை இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் இறுதிப் போரில் மடிவதற்கு இந்த அமைப்பு உதவி புரிந்தது.
தற் போது நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை அவர்கள் பிடித் துள்ளனர்.
நாங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம் என்று அவர்கள் சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம்.
நாம் அவரிடம் கேட்பது என்னவென்றால் ஒரு மாற்றத்திற்காக சிங்கள மக்கள் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள்.
நீங்கள் கனவுகாண்கின்ற நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்னை தீர்க்கப்பட்ட வேண்டும்.
அது எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்க முடியாது. உங்களுக்கு அந்த அருகதை கிடையாது.
தமிழர்களின் விருப்பங்களை ஏற்றுக் கொண்டு அந்த விருப்பங்களை அங்கிகரிக்கும் மூலமாக தமிழர்களை இந்தநாட்டின் ஆட்சியிலே பங்காளிகள் ஆக்குவதற்கு துணிய வேண்டும்.
அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்கவேண்டும் என்று புத்த பிரானையும் எமது கடவுளர்களையும் நாங்கள் பிரார்த்திக்கின்றோசமஷ்டி.
வடக்கு-கிழக்கு தமிழர்தாயகத்தை அங்கீகரித்து எமது தேசம் இறைமை என்ற வகையில் எமது சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து அதனடிப்படையில் ஒரு சமஷ்டி அரசியலமைப்பினை கொண்டு வருவதனூடாக இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு தமிழர்களின் பங்களிப்பை பெறுவதற்கான அத்திவாரத்தை நீங்கள் இடவேண்டும்.
அதற்குரிய அணுகுமுறைகளையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு நீங்கள் உடனடியாக இறங்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் அவரை நோக்கி முன்வைக் கின்றோம் - என்றார்.