அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம். அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார மூலோபாயத்தின் அடிப்படையில் எமது கொடுக்கல் - வாங்கல்களில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்த கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், உலகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற நட்பு நாடு என்ற வகையில் சீனா மீது அன்பு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்-
இலங்கையின் அயல் நாடு இந்தியா. அங்கு 130 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார மூலோபாயத்தின் அடிப்படையில் எமது கொடுக்கல் - வாங்கல்களில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இதனை பகிரங்கமாகவே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு நாங்கள் வெளிப்படையாக கூறும்போது, அதனை ஏற்காமல் இல்லை.
நீங்கள் சீனாவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கருதினால், அவ்வாறு எதுவும் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.
அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம். மறுபுறம் உலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக சீனா உள்ளது. வறுமையை குறைத்துள்ள நாடாகவும் உள்ளது.
எனவே நட்பு நாடு என்ற வகையில் சீனா மீது எமக்கு அன்புள்ளது.
அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அனைத்து தொழில்துறைகளிலும் முன்னேற்றம் கண்ட நாடாக உள்ளது.
எனவே, யாருடைய தொழில். துறைகளையும் எம்மால் நிராகரிக்க முடியாது.
எனவே, அனைத்து தரப்புகளையும் நாட்டுக்கு பயனுள்ளதாக உள்வாங்கும் பக்குவமுள்ள ஆட்சியாகவே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உள்ளது.
அந்த வகையில், சீனாவை ஆதரிப்பதும் ஆதரிக்காமல் விடுவதும் எமது நிலைப்பாட்டை பொறுத்ததாகும்.
இருப்பினும் சீனா குறித்த பிரச்சினைகள் தொடர்பில் எமது அரசாங்கம் நீண்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறது.
வெகுவிரைவில் தெளிவான விளக்கத்தை அறிவிக்கவுள்ளோம் - என்றார்.