வவுனியா, மன்னார் பிரதான வீதி யில் அமைந்துள்ள பிராந்திய குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் முன்பாக நேற்று ஏற்பட்ட அசாதாரண நிலமையை அடுத்துப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
வவுனியா பிராந்திய குடிவரவு குடிய கல்வுத் திணைக்களத்தினால் சாதாரண சேவையின் கீழ் 25 நபர்களுக்கும், ஒருநாள் சேவையின் கீழ் 25 நபர்களுக்கும். ஏற்கனவே சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட காலம் முடிவடைந்தும் கடவுச்சீட்டினை பெறாதவர்கள் 10 நபர்கள் என ஒரு நாளைக்கு 60 நபர்களுக்கு கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுபவர்களில் முக்கிய தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில், வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பாக கடந்த ஐந்து நாள்களாக வரிசையில் நின்றும் தமக்கும் இதுவரை கடவுச்சீட்டு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்துக் களேபரம் பண்ண முற்பட்டமையால் குழப்ப நிலமை ஏற்பட்டது.
அதனையடுத்து வவுனியா பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவ்விடத்தில் நிலவிய அசாதாரண நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனர். குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளை திணைக்கள வாயில் முன்பாக வரவழைத்து வரிசையில் நின்ற மக்களுக்கு தற்போதைய நிலைமை தொடர்பில் தெளிவூட்டல் வழங்கப்பட்டமையினையடுத்து சுமுக நிலை கொண்டு வரப்பட்டது.
மேலும், கடவுச்சீட்டினை நாளைய தினம் பெறுவதற்காக மக்கள் தொடர்ச்சியாக வரிசையில் காத்திருக்கின்றனர். சாதாரண சேவையின் கீழ் மார்ச் மாதம் விண்ணப்பித்து கடவுச்சீட்டு பெறாத வர்கள், வெளிநாட்டியிலிருந்து வருகை தந்தவர்கள், மீண்டும் வெளிநாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு கலாவதியானவர்கள், மாணவர்கள், சகோதரங்களில் திருமணத்திற்கு செல்லவுள்ள வர்கள், வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு ஆவணம் கிடைத்தும் கடவுச்சீட்டு இல்லாதவர்கள் எனப் பலரும் இவ் வரிசையில் காத்திருகின்றமை குறிப்பிடத்தக்கது.