கடவுளாகப் பார்த்த மருத்துவர்களை இன்று வியாபாரிகளாக பார்க்கிறார்கள்
மருத்துவராக வந்தால் நல்லாய் உழைக்கலாம் என்று தான் இந்தக் காலத்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மருத்துவராக வரவேண்டும் என விரும்புகின்றனர் போலும். ஆனால் உழைப்புக்கு அப்பால் மருத்துவர்கள் நேர காலம் பாராமல் 24 மணி நேரமும் தமது சேவையை செய்யும் துறை என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.
ஆனால் இன்றைய உலகம் புதிது புதிதாக வரும் நோய்களுக்கு மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றது. நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தால் எதற்காக இறந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறது.
இப்படியான நிலைமையில் உலகம் இருக்கும் போது அபிவிருத்தி அடையாத நாடுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தமது ஊதியத்தை அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். மருத்துவர்களின் ஊதியம் அதிகரித்துக் கொண்டே போனாலும் மருத்துவத்தில் மாற்றம் எழுகிறதா? என்பதை பார்ப்பதற்கு நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
இதனால் மருத்துவத்தில் நோயாளிகள் மத்தியில் திருப்தி இல்லாத சூழல் எழுகிறதா? என்பதைக் கூட பார்க்க நேரமில்லை. எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
கடவுள் போல பார்த்த மருத்துவர்களை இன்று வர்த்தகர்களாகப் போல பார்க்கிறார்கள். அதனால் தான் சம்பளம் போதாது என போராட்டம் செய்கிறார்கள் போலும். பணம் செலுத்தினால் சிரமம் இல்லாமல் மருத்துவரிடம் இருந்து சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்று நினைத்து தனியார் மருத்துவமனைக்கு வருகிறார்கள். மற்றும்படி ஒன்றுமில்லை.
வெப்பம் அதிகரிப்போ என்னவோ வறட்டு இருமல் தொற்றிக் கொண்டது, இந்த நோய்க்கு பெயர் சொல்லும் மருத்துவரிடம் காட்டி மருந்து எடுப்பதற்காக கடந்த 29 ஆம் திகதி இரவு 7 மணி இருக்கும் யாழில் பிரபல தனியார் மருத்துவமனைக்கு செல்கிறேன்.
அங்கே 12 நோயாளர்கள் இந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக காத்துக்கிடக்கிறார்கள். 8.30 மணிக்குத் தான் அந்த பெயர் சொல்லும் படியான மருத்துவர் வந்தார். அவருக்காக பல மருத்துவமனைகள் காத்துக்கிடக்கிறது என்பதை அவர் வந்த நேரத்தில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும்.
இன்று உழைப்பு கூடிய துறை என்றால் மருத்துவத்துறை தான். அதிலும் மருத்துவர்களின் உழைப்பின் பெறுமதி அதிகம். பாராட்டத்தக்கது. ஆனால் OUT PUT தான் என்ன? என்று பார்த்தால் எதுவுமே இல்லை. பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் மருத்துவத்தை கட்டிக் காப்பது யார்?
நோயாளரின் வயிற்றில் அடிக்க நினைக்க கூடாது. உயிருக்குப் போராடும் போது மருத்துவர் கைபட்டு மீண்டு வந்தது என்று நோயாளர் நினைக்கனும், அந்த நிலையை உருவாக்க வேண்டும். எதுவும் படித்ததை விட அனுபவம் தான் மருத்துவ தொழிலை மேம்படுத்தும். அதனால் தான் அந்த தொழிலுக்கு வழிவிட்ட அனைத்து தொடர்பிலும் கரிசனை கொள்ளவேண்டும்.
1000 பேரைக் கொன்றவன் தான் முழுமையான வைத்தியன் ஆவான் என்று சொல்வது, 1000 பேரை கொல்வதல்ல, சிகிச்சை பலனளிக்காத போது இறந்த 1000 பேரைப் பார்த்த மருத்துவர் சிகிச்சையின் போது படித்து படித்து முழுமையான வைத்தியனாகிறான்.
இதை விட நல்ல பழமொழி இல்லை.படித்ததை விட அனுபவம் தான் நல்லதொரு மருத்துவரை உருவாக்குகிறது. படித்த எல்லோரும் சிறந்த மருத்துவர் அல்ல.
தனியார் மருத்துவமனை உங்களை நல்ல நிலைக்கு கொண்டு சென்றதை மறுக்க முடியாது. பொது மருத்துவமனைகளில் நின்ற நேரத்தை விட தனியார் மருத்துவமனைகளில் நிற்கும் நேரம் அதிகம் என்றால் சொல்லவா வேண்டும்?