ஈழத் தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனை -- எம்.பி சி.சிறீதரன் தெரிவிப்பு

2 months ago



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ வருந்துவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இன்றாவது ஈழத் தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே கருதுகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின விசேட ஒதுக்கீட்டில் நான்கு மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் வளைவு நிர்மாணிக்கப்பட்டது.

குறித்த நுழைவு வளைவு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று கல்லூரியின் முதல்வர் சவரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ வருந்துவதாக செய்திகள் வெளிவந்திருப்பது. உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டியது.

அப்பாவி மாணவன் குழந்தையாக இருக்கின்றபோது பிஸ்கட் கொடுத்து அவரை மிக அருகில் வைத்துச் சுட்டுக் கொன்றார்களோ, அதனைச் சிந்திக்காத மகிந்தவின் குடும்பம், இப்பொழுதாவது மகிந்த ராஜபக்ஷவின் வாயால் அதனை ஒரு கனதியான வேதனையாக வெளிப்படுத்தியிருப்பதை மிக அவதானத்துடன் பார்க்கிறோம்.

இந்த மண்ணில் மிகப்பெரிய மனிதப் பேரவலங்களை நடத்துவதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் இன்றாவது ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே கருதுகிறேன்.

ஜனாதிபதியாக அவர் இருந்த காலகட்டத்தில் யுத்தம் முடிந்தபோது இந்த நாட்டில் தமிழ் மக்களின் தேசிய பிரச்னையை தீர்க்கக்கூடிய மிகப்பெரிய தலைவராக அவர் இருந்தார்.

அவருக்கு சிங்கள மக்களின் அதிகமான ஆதரவு இருந்தது. இனப்பிரச்னையை தீர்த்திருக்க முடியும். வரலாற்றில் பிழைவிட்ட தலைவராக அவர் வாழ்கின்றார்.

அவர் இப்பொழுதாவது உணர தலைப்பட்டிருப்பது. வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பார்க்கிறோம்-என்றார்.