தமிழர் உரிமையை அங்கீகரிக்க சங்குக்கு வாக்களிக்க வேண்டும் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரன் தெரிவிப்பு.
தமிழர் உரிமையை அங்கீகரிக்க சங்குக்கு வாக்களிக்க வேண்டும் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரன் தெரிவிப்பு.
"ஜனநாயக முறையில் கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஒவ்வொரு தமிழனும் பயன்படுத்தி எமது உரிமையை அங்கீகரிக்க சங்கு சின் னத்துக்கு வாக்களிக்க வேண்டும்"- என்று வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.
"கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பலவகையில் போராடிய போதும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வையும் இதுவரை வழங்கவில்லை. பல ஒப்பந்தங்கள். பல வட்டமேசை மாநாடுகள், பல பேச்சுகள், பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13ஆவது அரசமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தியதா?
தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தர் ஐயா வரை ஏமாற்றப்பட்டார்கள்.
ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எமது தீர்வுக்கான புதிய அணுகு முறையாக கருதி அனைத்து தமிழ் மக்களும் சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
நாம் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் - வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய தாயகம் - நாம் தனித்துவ மானவர்கள் - எமக்கு சுயநிர்ணய உரிமையுண்டு -எமது நிலம், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு போன்றன பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கு பூரண சுயாட்சி அதிகாரம் எமது பகுதிக்குத் தேவை என்பதை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக இந்தத் தேர்தலை கருதி ஒவ்வொரு தமிழனும் தவறாது சங்கு சின்னத்துக்கு வாக்களித்து எமது உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
எமது கோரிக்கையை வன்முறையற்ற ஜனநாயக வழியில் கிடைத்த அரிய சந்தர்ப்பமாக கருதி இந்தத் தேர்தலில் மக்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.
இதன் மூலம் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் தமிழர்கள் தம் உரிமைக்கான கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு தமிழ் மகனும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் நாங்கள் ஒவ்வொருவரும் இந்த உரிமைக்கான அங்கீகாரத்துக்கு பங்களித்துள் ளோம் என்பதை உறுதிப்படுத்த வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதியில் வசிக்கும் எமது தாயகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரனை ஆதரித்து சங்கு சின்னத்துக்கு வாக்களித்து உங்கள் வரலாற்று கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்றுள்ளது.