மாகாண சபைகளை மீண்டும் இயங்க வைக்கவேண்டும்.-- தேசிய சமாதானப் பேரவை ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

2 months ago




வடக்கு, கிழக்கில் மக்கள் தெரிவுசெய்யும் 'மாகாண சபைகளை மீண்டும் இயங்க வைக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க விடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இது தொடர்பாக சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு

அரசமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் ஊடாக தேசிய நல்லிணக்க செயல்முறையை முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் பிரசாரங்களிலும் வாக்குறுதியளித்தார்.

ஆட்சி முறையில் மக்கள் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பொன்றை வழங்குவதற்காக "மாகாண சபைகள் தேர்தலை ஒரு வருட காலத்துக்குள் தனது அரசாங்கம் நடத்தும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில்                          உறுதியளிக்கப்பட்டது.

இனப்பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக இந்திய அரசாங்கத்துடன் இணங்கிக்    கொள்ளப்பட்ட சமாதான செயன்முறையின் ஓர் அங்கமாகவே மாகாண சபைகள் நிறுவப்பட்டன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் அந்தப் பகுதிகளில் பிரதிநிதிகளை தெரிவு செய்து தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதற்கு மாகாண சபைகள் அனுமதிக்கின்றன என்பதே அந்த முறைமையின் முக்கியத்துவமாகும்.

இந்தியா, சுவிற்சர்லாந்து உட்பட பெரும்பாலான வெற்றிகரமான நாடுகளில் இதே போன்ற அதிகாரப் பரவலாக்கல் முறைமைகள் நடைமுறையில் இருக்கின்றன.

சுதந்திரமடைந்த நேரத்தில் இலங்கை சுவிற்சர்லாந்துடன் ஒப்பிடப்பட்டது.

வெளியேறிய பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட மத்தியமயப்பட்ட அரசாங்க முறைமை பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் இடையில் பயனுறுதியுடைய அதிகாரப் பகிர்வை தடுத்தது என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது.

மத்திய மயப்பட்ட ஆட்சிமுறை தலைநகர் பிராந்தியத்துக்கும் மாகாணங்களுக்கும் இடையில் பெரும் பொருளாதார ஏற்றத் தாழ்வையும் தோற்றுவித்தது.

அதன் விளைவாக சனத் தொகையில் பெரிய பிரிவினர் பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்பட்டதுடன் அரசியல் ரீதியாகவும் வலுவிழந்தனர்.

அதிகாரப் பரவலாக்கத்தை உள்ளடக்குகின்ற "முறைமை மாற்றத்தை" நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

மாகாண சபைகள் அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை பெருமளவுக்கு பயனுறுதியுடையவையாக இருக்கவேண்டும் என்று மாகாண ஆளுநர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி திஸநாயக்க அண்மையில் கூறிய ஆலோசனை மெச்சத்தக்கது.

ஆனால், ஜனாதிபதியின் பிரதிநிதிகளால் அன்றி மக்களின் பிரதிநிதிகளால் தீர்மானங்கள்   மேற்கொள்ளப்படுகின்ற மாகாண சபைகள் தொடர்பிலான விவகாரங்களை அவர் ஆளுநர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை.

ஆளுநர்கள் ஜனாதிபதியால் நேரடியாக அரசியல் ரீதியாக நியமனம் செய்யப்படுபவர்களே.

மாகாண சபைகள் பெரும் செலவை ஏற்படுத்துகின்றதும் நாட்டுக்கு ஒரு சுமையாக அமைகின்றதுமான தேவையற்ற ஓர் ஆட்சி முறை அடுக்கு என்ற வாதங்கள் மாகாண சபைகளின் நோக்கங்களுக்கு பொருத்தமற்றவை.

மாகாண சபைகளின் நோக்கத்தையும் இனப்பிரச்னையை கையாளுவதில் அதன் வகிபாகத்தையும் சில அரசாங்க அதிகாரிகள் உணர்ந்து கொள்ளவில்லை.

அவர்களின் அண்மைய கருத்துகள் இதை வெளிக்காட்டுகின்றன என்பதை தேசிய சமாதானப் பேரவை சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தேர்தல் வெற்றிக்காக ஜனாதிபதி திஸ நாயக்கவை தேசிய சமாதானப் பேரவை பாராட்டி வாழ்த்துகிறது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் வளமானதும் துடிப்பானதுமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர் முன்னெடுக்கும் சரியான சிந்தனையுடனான முயற்சிகளை தேசிய சமாதானப் பேரவை உறுதியாக ஆதரிக்கும்.

தனது வாக்குறுதிகள் நாட்டின் சகல பாகங்களிலும் வாழும் சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களுக்கு யதார்த்தமாகக் கூடியதாக தேசிய நல்லிணக்க செயன்முறை மீதான பற்றுறுதியை ஜனாதிபதி           தெளிவாக வெளிக்காட்ட வேண்டும் என்று நாம் அழைப்பு விடுக்கிறோம்.