மன்னாரில் மட்டும் வனவள, வனஜீவராசிகள் திணைக்களகங்களால் சுமார் 4620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது

மன்னார் மாவட்டத்தில் மட்டும் வனவள நிணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிவற்றினால் சுமார் 4620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.
முசலி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று(15) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் போது கிராமமட்ட பொது அமைப்புகள் கருத்து தெரிவிக்கையில்,
எமது பிரதேச செயலர் பிரிவில் பொதுமக்களின் பெருமளவு காணிகள் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அவற்றை மீள பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை முசலிப் பிரதேச செயலகத்தால் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் வனவளத் திணைக்களத்திடமிருந்து 3510ஏக்கர் காணிகளும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து 1110ஏக்கர் காணிகளும் விடுவித்துத் தரும்படி கோரப்பட்டுள்ளதாக முசலிப் பிரதேச செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பிரதேச செயலர், கிராமஅலுவலர், காணி உரிமையாளர்களுக்குத் தெரியாமல், வனலாகா தமது எல்லைக்கற்களை இட்டு மக்களின் காணிகளை அபகரித்து வருகின்றது.
அத்தோடு வனஜீவராசிகள், தொல்லியல் திணைக்களத்தினர், படையினர் என பல்வேறு திணைக்களங்களும் இவ்வாறு எமது மக்களின் காணிகளை அபகரிக்கிறது.
இதில் மிக அதிகளவான மக்களின் காணிகளை வனவளத் திணைக்களம் அபகரித்துள்ளது.
இவை குறித்து அரச தரப்பு எம்.பிக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என கூறினார்.
இதன் போது கருத்து தெரிவித்த முசலி பிரதேச செயலர், இடப்பெயர்விற்கு முன்னர் மக்களால் பயன்படுத்தப்பட்டு இடப்பெயர்விற்குப் பின்னர் வனலாகவால் கையகப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட வேண்டிய மக்களின் காணிகள் எதிர்காலத்தில் மக்களின் குடியிருப்புத் தேவை, மக்களின் விவசாயத் தேவை, மேய்ச்சல் தரவை ஏனைய பொதுத் தேவைகள் கருதி மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியோடு வனவளத் திணைக்களத்திடமிருந்தும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்தும், முசலி பிரதேச செயலகம் உள்ளிட்ட பிரதேச செயலகங்களால், காணிகள் விடுவித்துத் தரும்படி கோரப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் பேசி இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முசலிப் பிரதேசசெயலாளர் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
