ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசை திருப்பவே மொட்டுக் கட்சியால் கருத்து. சந்தேகம் எழுவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவிப்பு.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை திசை திருப்பவே தற்போது புதிய கருத்துக்கள், மொட்டுக் கட்சியைச் சேர்ந்த நபர்களால் வெளியிடப்படுகிறதோ எனும் சந்தேகம் எழுவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தானும் சாட்சி வழங்கத் தயார் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு கருத்துக்கள், ஒவ்வொரு நபர்களினால் தொடர்ச்சியாக சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருகின்றன.
உண்மையில், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள், இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் தொடர்பாக எனக்கும் தகவல் கிடைத்ததுடன் இது தொடர்பாக நாம் கடந்த சில வருடங்களாகவும் தெரிவித்திருந்தோம்.
எமது கட்சியியைப் பொறுத்தவரை, இந்த தகவல்களை வெளிக்கொண்டு வரும் நபர்கள் மீது குற்றஞ்சாட்டுவதை நாம் முழுமையாக எதிர்க்கிறோம்.
அனைத்து தகவல்களையும் ஒன்றுதிரட்டி, விசாரணை நடத்தி தான் ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும்.
எந்தக் கட்சியினராக இருந்தாலும், அவர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஒரு விடயத்தை கூறுவாராயின், அதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
அத்துடன் ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகிய இருவரும், மிகவும் திறமையான உத்தியோகத்தர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர், ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று உறுதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த விசாரணையை திசைதிருப்பத்தான் தற்போது வேறு விடயங்கள் கூறப்படுகின்றதா என்ற சந்தேகமும் எமக்கு எழுகிறது.
விடயங்களை கூறும் தரப்பினர் தொடர்பாகவும் எமக்கு சந்தேகம் உள்ளது.
கடந்த காலங்களில் நான் இலஞ்ச-ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளித்தபோது, இந்த விசாரணையை நிறுத்துமாறு அன்று நூற்றுக்கணக்கானோரை திரட்டி போராட்டம் நடத்தியதும் இந்த மொட்டுக் கட்சியினர் தான்.
இந்த தரப்பினர்தான் இன்று விசாரணையை வேறு திசைக்கு திருப்ப இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க, தேர்தல் காலங்களில் மேடைகளில் கூறிய வாக்குறுதிக்கு அமைவாக, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்தரதாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்-என்றார்.