இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் உண்மையான நண்பனாக எப்போதும் இருக்கும்.-- இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு
இந்தியா, நிபந்தனையற்ற உறுதியான அண்டை நாடாகவும், இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் உண்மையான நண்பனாகவும் இருந்திருக்கின்றது, எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(18) இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நேற்று இலங்கையின் நகர அபிவிருத்தி நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சருடன் இணைந்து திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமத்தை மாவட்டத்தில் 24 குடும்பங்களுக்கு வீட்டு வசதிகள் வழங்கி திறந்து வைத்தேன்.
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருடன் அத்தோடு கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து யாழில் 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இந்திய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்துக்கு திருவள்ளுவர் கலாசார மையம் என்ற பெயர் சூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கான கலாசார மற்றும் வரலாற்று பிணைப்புக்கள் ஆளமானவை மற்றும் நீடித்தவை.
இந்த உறவுகள் மொழி இலக்கியம் மதம் கலை கட்டடக் கலை மற்றும் சமய மரபுகள் போன்ற நமது பாரம்பரியம் ஒவ்வொரு விடயத்திலும் ஊடுருவி ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு வளமான பிணைப்பை உருவாக்குகின்றது.
இந்த ஆளமான பிணைப்புகள் தேவைப்படும் காலங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய உறுதியான ஆதரவுகள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக நெருக்கடியான தருணங்களில் இலங்கைக்கு இந்தியாவின் அசைக்க முடியாத ஒற்றுமை இந்த நீடித்த நட்புக்கு ஒரு சான்றாகும்.
இந்திய அரசால் வழங்கப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் போன்ற முன்முயற்சிகள் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கொவிட் தொற்று நோய்களின் போது இந்தியா உடனடி பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியது.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார மீட்சியின் போது முக்கியமான ஆதரவை வழங்கியது.
இந்த நல்லெண்ண செயல்கள் நமது நாடுகளிடையே நீடிக்கும் கூட்டுறவையும் பரஸ்பர மரியாதையையும் எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் கலை கலாசார மற்றும் மதப் பரிமாற்றங்களிலும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று நம்மை ஒன்றிணைக்கும் வரலாற்று பிணைப்புக்களை மேலும் வலுப்படுத்துகிறது.
"இந்தியா நிபந்தனையற்ற உறுதியான அண்டை நாடாகவும், இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் உண்மையான நண்பனாகவும் இருந்திருக்கின்றது, எப்போதும் இருக்கும்" வருங்காலங்களில் நமது நாடுகளிடையேயான உறவுகள் மேலும் வலுவாக வளரட்டும் - என்றார்.