பாதாளக் குழுவின் படுகொலைகள் பழிவாங்கும் படலமே பொலிஸ் தெரிவிப்பு.

5 months ago


இலங்கையில் பாதாள உலகக் குழுவினருக்கு இடையில் மோதல் நிலைமை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் படுகொலையின் பின்னணியில் பழிவாங்கல் நடவடிக்கையே பிரதான காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பாதாள உலகக் குழுவின் பிரதான தலைவர்களில் ஒருவராக மாகந்துரே மதூஷ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டி ருந்தார்.

இதற்குப் பழிவாங்கும் வகையில் மதூஷூக்கு எதிரானவர்களைக் கொலை செய்யும் வேலைத்திட்டம் ஒன்று வெளிநாட்டிலிருந்து செயற்படுத்தப்பட்டு வருகின்றதாக அறியமுடிகின்றது.

படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக்கிரியைகள் அவரது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் பொரளை பொதுமயானத்தில் இடம்பெற்றது. இந்த நிலையில் மாகந்துரே மதுஷின் சடலம் புதைக்கப்பட்ட கொடிகமுவ பொது மயானத்துக்கு முன்பாக அவரது புகைப்படத்துடன் கூடிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் "எங்கள் அண்ணனே ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக்கொள்ளுங்கள்” என பதா கையில் எழுதப்பட்டுள்ளது.

அதேவேளை மாகந்துரே மதுஷ் கைது செய்யப்படுவதற்கு பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கிய முதல் நபரான கிளப் வசந்த கொல்லப்பட்டதாக இலங்கையின் மிக மோசமான குற்றவாளிகள் பட்டியலிலுள்ள கஞ்சிப்பான இம்ரான் தெரிவித் துள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட குழு விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அண்மைய பதிவுகள்