ஒற்றையாட்சிக்கான புதிய அரசமைப்பை நிறைவேற்ற அரசு முயற்சி. தடுக்கும் பலம் தமிழர் தரப்புக்கு கிடையாது எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு

ஒற்றையாட்சி சித்தாந்தம் கொண்ட புதிய அரசமைப்பை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது.
இதை பாராளுமன்றில் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றது. இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் பலம் தமிழர் தரப்புக்கு கிடையாது.
எனவே புதிய அரசமைப்பு குறித்த சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் போது அதனை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
ஒற்றையாட்சி சித்தாந்தம் கொண்ட புதிய அரசமைப்பு தமிழரின் ஆதரவுடன் நிறைவேறினால் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை.
இவ்வாறு எச்சரித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.
வடக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்களுடனான இந்தச் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். நகரிலுள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தவை வருமாறு -
மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பல சவால்கள் உள்ளன.
இந்த சவால்களுக்கு தீர்வு காணும் நிலைமை அண்மையில் இல்லை.
எனவே இந்த சவால்களை மறைக்கும் விதமாக ஒற்றையாட்சி தன்மை கொண்ட புதிய அரசமைப்பை குறிப்பாக தமிழர்களின் ஆதரவுடன் நிறைவேற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
2015 முதல் 2019 வரையான காலத்தில் நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்பை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்கிறது.
'ஏக்கிய இராஜ்ஜிய' வில் சமஷ்டி இருப்பதாகக் கூறிக் கொண்டுவரப்பட்ட அந்த ஒற்றையாட்சி அரசமைப்பு தமிழினத்துக்கு ஆபத்தானது.
இந்த புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றிருந்தது.
தற்போது 'ஏக்கிய இராஜ்ஜிய நிலைப்பாட்டை தாம் கைவிட்டுவிட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் சீ. வீ.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 159 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள அரசாங்கம் புதிய அரசமைப்பை இலகுவாக நிறைவேற்ற முடியும்.
தமிழ் பிரதிநிதித்துவத்தால் இதனைத் தடுக்க முடியாது.
வடக்கு, கிழக்கு தமிழர் தரப்பை பிரதி நிதித்துவப்படுத்தும் 19 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்கக் கூடாது.
எனவே தமிழ்த் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 19 பாராளுமன்ற உறுப்பினர்களும் புதிய அரசைமைப்பை எதிர்க்க வேண்டும்.
இதற்கான முதல் கட்ட முயற்சிகளை நாம் ஆரம்பித்துள்ளோம்.
இதேநேரத்தில் புதிய அரசமைப்பின் நடைமுறையாக்கம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் போது தமிழ் மக்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.
ஏனெனில் தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.
ஏனெனில் தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி சித்தாந்தம் கொண்ட அரசமைப்பை நிறைவேற்றிவிட்டால் இங்கு இனப்பிரச்னை இல்லை என்பதை சர்வதேசம் ஏற்றுவிடும் இதன்பின்னர் தமிழ் மக்களுக்கான எதிர்காலம் இல்லை - தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கவும்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான 76 ஆண்டுகளில் தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை எதிர்த்தே வந்துள்ளனர்.
நடைமுறையில் உள்ள அரசமைப்பு உட்பட அனைத்து ஒன்றையாட்சி அரசமைப்புகளையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர்.
எனவே புதிய ஒற்றையாட்சி அரசமைப்பையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் என்று காட்டியும் புதிய அரசமைப்புக்கான ஆணையை அரசாங்கம் கோரலாம்.
அதை காரணமாக வைத்து தமிழ் மக்கள் புதிய அரசமைப்பை ஆதரித்து விடக் கூடாது.
எந்த வகையிலும் ஒற்றையாட்சி தத்துவத்தைக் கொண்ட அரசமைப்பை நாம் ஏற்றுவிடலாகாது.
இதனை செய்தால் தமிழினத்துக்கு எதிர்காலம் என்பதே இல்லை - என்றார்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. சுஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் க. சுகாஸ், சட்ட ஆலோசகர் காண்டீபன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
