அதிகார வெறிபிடித்த ஆட்சியாளர் போல், அரசை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கம் என்னிடம் இல்லை-ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு
2022ஆம் ஆண்டு நடைபெற்ற அறகலய போராட்டம் எனது உண்மையான நண்பர்கள் மற்றும் எதிரிகள் யார் என்பதை வெளிப்படுத்தியது என ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சவேந்திர சில்வாவின் சேவை நலன் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டாவறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
2022ஆம் ஆண்டு அறகலய போராட்டத்தினால் ஏற்பட்ட குழப்ப நிலை, எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு சிக்கலான கட்டமாகும்.
இது எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை காட்டிக்கொடுத்தது.
இராணுவம் என்பது ஒரு உத்தியோகபூர்வ ஆயுதப் படையாகும்.
இது வெளியில் அல்லது உள்நாட்டில் அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாக்க தயாராக உள்ளது.
அரகலய போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டேன்.
எந்த ஒரு சாதாரண அப்பாவிக் குடி மகனும் இராணுவ துப்பாக்கிச் சூட்டில் இறப்பதை நான் விரும்பவில்லை.
நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஒருவனாக இருக்க நான் விரும்பவில்லை.
இதேவேளை, அதிகார வெறி பிடித்த ஆட்சியாளர்கள் கூறுவது போல், அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற தீய நோக்கம் என்னிடம் இல்லை-என்றார்.