மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் சமூகத்தில் சுற்றாடல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நல்லூர்க் கந்தன் உற்சவ காலத்தில் பல்வேறு செயற்பாடுகளை பாடசாலை சுற்றாடல் கழகங்களின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் போது பருத்தித்துறை வீதியில் மாநகரசபை சித்த மருத்துவமனையை அண்டிய பகுதியில் சுற்றாடல் விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டு ஆலய தரிசனத்திற்காக வருபவர்களிற்கு சுற்றாடல் விழிப்பணர்வுப் பிரச்சாரம் செய்வதோடு, பாடசாலை மாணவரிடம் சுற்றாடல் நேய வினாக்கள் வினாவப்பட்டு சரியான விடையை வழங்கும் மாணவருக்கு உடனடியாகப் பரிசு வழங்கப்படுகிறது.
இவ் வினாடி வினா நிகழ்வில் அதிக மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுச் செல்வதையும் அவதானிக்க முடிந்தது.
ஆலய வீதிகளில் சுற்றாடல் கழக மாணவர்கள் பொலித்தீன் பாவனையின் தீமை பற்றி விழிப்புணர்வில் ஈடுபட்டதையும், பக்தர்களிற்கு துணிப்பை வழங்கியதையும், சூழலிலுள்ள பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை சேகரித்ததையும் அவதானிக்கமுடிந்தது.
கடந்த சில வருடங்களாக மாலை வேளையில் உற்சவ காலத்தில் இவ்வாறான செயற்பாட்டில் மாணவருடன் இணைந்து மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் செயற்படும் விதம் பலராலும் பாராட்டப்பட்டும் வருகிறது.