வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஒழுங்கற்ற வேலையால் சிக்கல்கள்.-- தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை
வளிமண்டலவியல் திணைக் களத்தின் ஒழுங்கற்ற வேலைத் திட்டம் காரணமாக, முன்னறிவிப்புகள் மற்றும் கணிப்புகளின் துல்லியம் தொடர்பில் சிக்கல்கள் தோன்றியதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
ஜப்பானில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டொப்ளர் ராடர் அமைப்பையும் நாடு இழந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்தை பராமரிக்க அதிநவீன உபகரணங் கள் இன்றியமையாதவை, ஆனால் நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் அத்தகைய கருவிகளைக் கொண்டிருக்கவில்லை.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 122 தானியங்கி மழை மானிகளில் 70 மழை மானிகள் மாத்திரமே 2023 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி வரை செயல்பட்டன.
அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி வரை சுமார் 52 மழை மானிகள் செயல்படாமல் இருந்த நிலையில் 36 மழை மானிகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தன.
மேலும், நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 453 வழக்கமான மழை மானிகளில் 44 தொடர்ச்சியாக தரவுகளை வழங்குவதில்லை.
மற்றும் அவற்றின் பராமரிப்புப் பணிகள் கூட செய்யப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு.
இவ்வாறான நிலையில் வானிலை முன்னறிவிப்பில் இன்றியமையாத தொழில்நுட்பமான டொப்ளர் ரேடார் முறைமை இன்றி இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் 15 வருடங்களாக முன்னறிவிப்புகள் மற்றும் கணிப்புகளை வழங்கி வருகின்றமை குறித்தும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டளவில் புத்தளம் மற்றும் பொத்துவில் வானிலை ஆய்வு தளத்தில் 2 டொப்ளர் ரேடார் அமைப்புகளை நிர்மாணிப்பதற்கு, ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன் வளிமண்டலவியல் திணைக்களம் 2017 ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்துள்ளது.
இதற்கான உதவித் தொகையாகக் கிடைத்த தொகை 563. 58 மில்லியன் ரூபாயாகும்.
ஆனால், நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலம் முடியும் வரை 3 இலட்சத்து 70 ஆயிரத்து 161 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த காலத்துக்குள் 2 டொப்ளர் ரேடர் அமைப்புகளின் கட்டுமானப் பணியை முடிக்காததால், அது தொடர்பான உபகரணங்கள் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு பிரச்னையும் எழுந்துள்ளது.
இதன்படி, 2 டொப்ளர் ரேடர் சிஷ்டம்களை நிறுவாமல், 2022இல் ஒன்றை மட்டும் நிறுவ ஜெய்க்கா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.