மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் இன்று ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டங்களில் ஈடுபட 3 எம்.பிக்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிப்பு

2 months ago



மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் இன்று ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டங்களில் ஈடுபட இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இதற்கான தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அ.அமலநாயகி, சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் உள்ளிட்ட எழுவருக்கு இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழர்களுக்கான உரிமையினை வலியுறுத்தி சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அறிவித்து வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வடக்கு-கிழக்கில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இன்று மட்டக்களப்பில் பேரணிக்கும் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காந்திபூங்காவில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதனைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் மட்டக்களப்பு நீதிமன்ற  எல்லைக்குள் அனுமதியளிக்காத வகையில் பொலிஸாரால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. 


அண்மைய பதிவுகள்