யாழ் மாவட்டத்தில் சுயதொழில் உற்பத்தியில் 46,000 இற்கு மேற்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்கள் ஈடுபடுகின்றனர் என்று யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
பெண்தலைமைத்துவத்தைக் கொண்டு இயங்கும் சிறுதொழில் டொப் ஆரோக்கியம் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிகழ்வு நேற்று(03) யாழ் பூநாரி மடத்தில் அமைந்துள்ள செல்வா மஹால் விடுதியில், சிறு தொழில் டொப் ஆரோக்கியா சுயதொழில் முயற்சியாளர் கலாஜோதி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, பெண்தலைமைத்துவ குடும்பமாக இருந்தால் சரி தொழில் முனைவோர் களாக இருந்தாலும் சரி உதவி கேட்டுவருவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உள்ளூர் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற அமைப்பு 5 வருட காலமாக பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது என்பது பெருமைக்குரியது.
பல உதவித் திட்டங்களைப் பெற்றுக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் இலவசமாக பொருட்களை பெற்றுக்கொள்ளுகின்ற மனநிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் எண்ணங்கள், மனநிலையில் அரசாங்கம்,மற்றும் அரச,சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகளைப் பெற்று அதன்மூலம் தமது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும், ஒரு சிலர் இலை,மறைகாயாக தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.
அவ்வாறான நபர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஒய்வுபெற்ற யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்,சிறுதொழில் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சிறுதொழில் முயற்சியாளர்கள், பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.