அவுஸ்திரேலியாவில் பிரிட்ஜிங் விசாவில் வசித்து வந்த இலங்கை தமிழ் அகதியொருவர் உயிரிழந்துள்ளார்.
2012ம் ஆண்டு படகுமூலம் அவுஸ்திரேலியா சென்ற உதயகரன் பெரியமூர்த்தி என்ற 53 வயது ஈழத்தமிழர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார் என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.
நவ்றுவில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் பிரிட்ஜிங் விசாவில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 12 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நீண்டகாலம் தங்கியிருந்த போதிலும் சமூகத்துடன் ஆழமான தொடர்புகளை கொண்டிருந்த போதிலும் அவருக்கு பாதுகாப்பு விசா மறுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அவர் இலங்கையில் உள்ள தனது இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் சேரமுடியாத நிலை காணப்பட்டதாக தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் யுத்தம் இனப்படுகொலை காரணமாக அவர் அங்கிருந்து தப்பியோடி வந்தார், பாதுகாப்பையும் சிறந்த எதிர்காலத்தையும் தேடினார் என தெரிவித்துள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை ஆனால் விசா காரணமாக அவர் குடும்பத்தை பிரிந்தே இருக்க வேண்டிய நிலை காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.
தொழில்கட்சி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகின்றது எனினும் அவர்கள் அகதிகளிற்கு விசா வழங்க மறுப்பதே அந்த உயிரிழப்பிற்கு காரணம் என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியின் போது இவ்வாறான மரணங்கள் அடிக்கடி இடம்பெற்றன, மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கியுள்ள நிலையில் அகதிகள் சமூகத்தில் மீண்டும் இவ்வாறான மரணங்களை காண முடிவதாக தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.