பிரபாகரன் விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கினார் என்று களுத்துறை எம்.பி ரோஹித அபே குணவர்தனவின் கருத்துக்கு யாழ். எம்.பி இ.அர்ச்சுனா எதிர்ப்பை வெளிப்படுத்தினார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கினார் என்று களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்த கருத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
"பிரபாகரன் ஒரு பயங்கரவாதி என்பதை என்றும் குறிப்பிடுவேன். அவர் இவர்களின் தலைவர் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை." - என்று ரோஹித அபேகுணவர்தன சபையில் உரத்து குறிப்பிட்டார்.
இதன்போது ரோஹித அபேகுண வர்தனவுக்கும். அர்ச்சுனாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரவு - செலவுத் திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றிய எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, 2006இல் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவிலாற்றை மூடி விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால் 2009 ஆம் ஆண்டு அவர் இறக்க நேரிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இரசாயன உரத்தைத் தடை செய்து ஒரே இரவில் சேதன உரத்தைப் பயன்படுத்த அறிவித்தார்.
இதனால் அவரின் ஆட்சியே இல்லாமல் போய் வீட்டுக்குப் போக நேரிட்டது.
இதனால் விவசாயிகளுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டும். விவசாயிகளை பகைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,
"நான் வடக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். இந்த இடத்தில் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இவர் ரோஹித அபேகுணவர்னவை நோக்கி எங்களின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் கதைத்தார்.
2009இல் அவரை இல்லாமல் செய்ததாகவும் கூறினார்.
அப்படியிருக்கையில் ஏன் இன்று வரையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவில்லை என்பதனைக் கூறுங்கள்." - என்றார்.
இதன்போது எழுந்த அமைச்சர் வசந்த சமரசிங்க,
"ஒழுங்குப் பிரச்சினை என்றால் என்ன என்று தெரியாமல் தேவையில்லாத விவாதத்தை இவர் (அர்ச்சுனா) உருவாக்குகின்றார். ஆகவே, இதற்கு இடமளிக்க வேண்டாம்." - என்று குறிப்பிட்டார்.
இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, இது ஒழுங்குப் பிரச்சினை அல்லவென அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுண வர்தன.
"நான் ஒருபோதும் இவர்களின் தலைவர் என்று பிரபாகரனைக் கூறவில்லை.
அவரைத் தலைவராகக் கூற வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவர் ஒரு பயங்கரவாதி. அன்றும், இன்றும் என்றும் அவர் பயங்கரவாதி, புலி, புலி." - என்று உரத்துக் குறிப்பிட்டார்.
இதன்போது மீண்டும் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப அர்ச்சுனா எம்.பி. முயன்ற போதும், அதற்கு இடமளிக்காத பிரதி சபாநாயகர், மதிய போசனத்துக்காகச் சபையை 12.30 மணி முதல் ஒரு மணித்தியாலத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் சபை கூடியபோது, மீண்டும் தனது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உரையாற்ற அர்ச்சுனா எம்.பி. முயற்சித்தார்.
இவ்வேளையில் சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி குழுக்களின் தலைவர் ஹேமாலி வீரசேகர, "அதில் ஒழுங்குப் பிரச்சினை இல்லை. அது நிலையியல் கட்டளையை மீறுவதாகும்."-என்றார்.
எனினும் தொடர்ந்தும் தனக்குப் பேச அனுமதி கேட்ட அர்ச்சுனா, 'நானொரு கட்சித் தலைவர், எனக்கு ஒரு நிமிடத்தைத் தாருங்கள், மற்றையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் நீங்கள் தமிழ்ச் சிறுபான்மையினர் கேட்கும் போது நிலையியல் கட்டளையைப் பார்க்கின்றீர்கள்.
ஏன் இந்த நாட்டில் இவ்வாறு நடக்கின்றது?" - என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அர்ச்சுனா எம்.பிக்குத் தொடர்ந்தும் பேசுவதற்குப் பிரதிக் குழுக்களின் தலைவர் அனுமதி வழங்கவில்லை.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
