அமெரிக்க ஜனாதிபதி பதவியை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கைப்பற்றியதால், ஈரானின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

2 months ago



அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் ஜனாதிபதி பதவியை மீண்டும் கைப்பற்றியதால், ஈரானின் நாணய மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

டொலருக்கு நிகரான ரியால் 703,000 ஆக சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டில், உலக வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்த போது, ஈரானின் ரியால் மதிப்பு ஓரளவுக்கு சிறந்த நிலையில் இருந்தது.

ஒரு டொலருக்கு 32,000 ரியால் என்ற அளவில் மதிப்பு இருந்தது.

கடந்த ஜூலை மாதம் ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பதவியேற்ற போது, டொலருக்கு நிகரான ரியால் 584,000 என்ற அளவில் இருந்தது.

இப்போது ஈரான் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்துக்கு மத்தியில், ஈரான் எதிர்கொள்ளவிருக்கும் புதிய சவால்களை காட்டுகிறது.

ஈரானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் 1979இல் கையகப் படுத்தப்பட்டு, அங்கிருந்தவர்கள் 444 நாட்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடந்து 45 ஆண்டுகள் கடந்த பின்பும் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் நீடிக்கின்றன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக 2018இல் அப்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.

அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான விரிசல் மேலும் அதிகரித்தது.

இது தவிர அணுசக்தித் திட்டத்துக்காக ஈரான் சர்வதேச தடைகளையும் எதிர்கொள்கிறது.

இதனால் பல ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி பதவியை கைப்பற்றியதால் அதன் தாக்கம் ஈரான் சந்தையில் எதிரொலித்து நாணய மதிப்பை பாதித்துள்ளது.